அல்லது சூதாட்டம் தொன்று தொட்டு பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.இந்த சூதாட்டத்தால் தங்கள் வாழ்வை ஏன் இராச்சியங்களைக் கூட இழந்தவர்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளோம்.
அந்தவகையில் இன்றைய கால கட்டத்தை பொறுத்தவரை சூதாட்டத்தின் நவீன வடிவம் தான் ‘கசினோ’. சூதாட்ட விளையாட்டுகள்.
அதுவும் இலங்கையில் அண்மைக்காலமாக மிக பிரபல்யமான ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவும், விநோத விளையாட்டாகவும் ‘கசினோ’ சூதாட்ட நிலையங்கள் மாறிவருகின்றன.
அதுவும் ‘கசினோ’ சூதாட்ட விளையாட்டுக்களுக்காக பாரியளவில் பணத்தை வாரி இறைக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
அந்தவகையில் ‘கசினோ’ விளையாட்டில் காணப்பட்ட அதீத ஈடுபாடு காரணமாக இலங்கைக்கு வந்த இந்திய தம்பதிகள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் வெள்ளவத்தைப் பகுதியில் கடந்த 3ஆம் திகதி பதிவானது.
எனவே, இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் வெள்ளவத்தை பொலிஸார் இதுவரை நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அந்தவகையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உயிரிழந்த மும்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட துட்விராம் பொட்தா என்ற 31வயதுடைய ஆணும், தமிழ்நாடு சென்னையைப் பிறப்பிடமாக கொண்ட மகாலக் ஷ்மி என்ற 27வயதுடைய பெண்ணும் சிறந்த கல்வி பின்னணியைக் கொண்டவர்கள்.
இருவரும் திருமணமாகி தொழில் நிமித்தம் மலேஷியாவில் குடியேறியதுடன், அங்கு பொறுப்புமிக்க உயர் பதவியொன்றில் பணிபுரிபவர்களாகவும் இருந்து வந்த நிலையில் தான் ‘கசினோ’ சூதாட்டத்தில் காணப்பட்ட ஈடுபாடு காரணமாக கடந்த மாதம் 27ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்தார்கள்.
அதுமட்டுமின்றி, இலங்கையில் காணப்பட்ட பிரபல ‘கசினோ’ சூதாட்ட நிலையத்தின் உரிமையாளர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினையும் பேணியும் வந்துள்ளார்கள்.
இதனால் இலங்கைக்கு வந்த இருவருக்கும் சிறந்த ஹோட்டலொன்றினைத் தெரிவு செய்து கடந்த 27ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரை ஹோட்டலுக்குரிய கட்டணத்தையும் செலுத்தி அங்கிருந்து ‘கசினோ’ விளையாட்டுகளுக்குச் செல்வதற்கான சகல போக்குவரத்து வசதிகளையும் ‘கசினோ’ நிலையமே செய்துகொடுத்துள்ளது..
அதன்பின் இருவருமே பெரும்பாலான நேரத்தை ‘கசினோ’ நிலையத்திலேயே செலவழித்தனர்.
இறுதியாக ஏப்ரல் 1ஆம் திகதி காலையில் வெளியில் சென்றவர்கள் மீண்டும் இரவு 8 மணியளவிலேயே ஹோட்டல் அறைக்கு வந்திருக்கின்றார்கள்.
எனினும், அதற்கு பின்னர் எக்காரணத்தை கொண்டும் அறையிலிருந்து அவர்கள் இருவரும் வெளியில் வரவில்லை.
குறைந்தது அன்றைய தினத்துக்கான உணவினைப் பெற்றுக்கொள்வதற்காகக் கூட ஹோட்டல் அறையிலிருந்து வெளியில் வரவில்லை.
மொத்தத்தில் அந்த அறையில் இருவர் இருக்கின்றார்கள் என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.
இந்நிலையில் தான் ஏப்ரல் இரண்டாம் திகதி மாலை 6 மணியளவில் அறையை சுத்தம் செய்வதற்காக ஹோட்டலில் பணிபுரியும் இளைஞன் கதவைத் தட்டியிருக்கின்றான்.
எனினும், வெகு நேரமாகியும் எந்தவிதமான பதிலும் கிடைக்காமை காரணமாக குறித்த இளைஞன் இது தொடர்பாக தனது மேலதிகாரிகளிடம் முறையிட்டுள்ளான்.
இதனைத் தொடர்ந்து அவர்களும் வந்து அறைக் கதவை திறக்க முற்பட்ட போதும் அறையின் கதவு உள்ளே தாழ்ப்பாளிட்டிருந்தது.
எனவே இனியும் பொறுக்கமுடியாது அறையின் உள்ளே ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்துடன் ஹோட்டல் நிர்வாகத்தினர் மேற்படி சம்பவம் தொடர்பாக தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் வெள்ளவத்தை பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தினரிடமிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து இரவு 7 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்த வெள்ளவத்தை பொலிஸார் தனது ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது ஹோட்டல் நிர்வாகத்தினரின் உதவியுடன் இருவரும் தங்கியிருந்த அறையை திறந்த போதே இருவரும் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளனர்.
இருவரும் இறுதியாக முதலாம் திகதி வெளியில் செல்லும் போது அணிந்திருந்த ஆடையுடன், மனைவியின் வயிறு பெரிதாக கழுத்து வரை போர்வையினால் மூடி, சாதாரணமாக படுத்திருப்பது போல் உயிரற்ற நிலையில் கிடக்க, அவளது அருகில் அதே கட்டிலில் கணவன் உயிரற்று கிடந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மனைவி எட்டு மாத கர்ப்பிணியாகவிருந்ததுடன், அறையில் சாதாரண ஆடை பையொன்றும், இரண்டு கையடக்கத்தொலைபேசிகளும், இருவரினதும் கடவுச்சீட்டுக்களும் காணப்பட்டுள்ளன.
மேலும் பணம் என்று சொல்வதற்கு மலேஷியா பணம் 10 ரிங்கிட் நாணயமொன்று மாத்திரமே காணப்பட்டுள்ளது.
அத்தோடு பாதி குடித்து வைத்த கொக்கோகோலா போத்தலொன்றும், இரண்டு கண்ணாடி குவளையும் அதன் அருகே காணப்பட்டதுடன், அதிக விஷத் தன்மை வாய்ந்த நஞ்சுப் போத்தலொன்றும் காணப்பட்டது.
எனவே குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருக்க வேண்டும் என்று பொலிஸார் சந்தேகித்தனர்.
இதனையடுத்து, காலை நீதிவான் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டதைத் தொடர்ந்து சடலங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தின் ஊடாக இந்தியாவில் வசிக்கும் இவர்களின் உறவினர்களுக்கு இவர்களின் மரணம் தொடர்பாக அறிவிக்கப்பட்டதுடன், இவர்களின் மரணத்துக்கான காரணத்தை பல்வேறு கோணங்களில் தேட முயற்சித்தனர்.
அதன்படி இருவரும் ‘கசினோ’ விளையாட சென்ற நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையின் மூலம் ‘கசினோ’ விளையாட்டில் மிகுந்த அனுபவமும், திறமையும் கொண்டிருந்ததாகவும், இவர்கள் இருவரும் இறுதியாக 29,30,31ஆம் திகதிகளில் மட்டும் சுமார் பல இலட்சம் ரூபாக்களை கசினோ சூதாட்ட விளையாட்டில் தோற்றுள்ளதாகவும்…,
கடைசியாக முதலாம் திகதி இரவு தாம் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வழமையாகச் செல்லும் ‘கசினோ’ நிர்வாகத்தினரின் வாகனத்தில் தான் சென்று ஹோட்டல் வாசலில் இறங்கியதாகவும் அதற்கு பின்னர் அவர்களுக்கு என்ன நடந்ததென்று தெரியாது என்றும் கசினோ நிலையத்தினர் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, ‘கசினோ’ நிர்வாகத்தினர் தமது சொந்த பணத்தில் முன்கூட்டியே இருவரும் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பணம் செலுத்தியிருப்பது இவர்கள் இருவர் மூலம் கசினோ நிர்வாகத்தினருக்கு பாரிய இலாபம் கிடைக்கும் என்ற நோக்குடன் இருக்கலாம் என்ற சந்தேகமும் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
‘கசினோ’ விளையாட்டில் ஏற்பட்ட பாரிய நிதியிழப்பு காரணமாகவே தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று பல்வேறு சந்தேகங்கள் பொலிஸ் தரப்பிலிருந்து எழுந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எது எவ்வாறாயினும், நன்கு படித்து பொறுப்புமிக்க உயர் பதவிகளை வகித்த அழகிய இளம் தம்பதி தங்களது திறமையின் மீதும், உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து வாழ்க்கையில் முன்னேறாமல் வெறும் பொழுது போக்கு அம்சங்களுக்கும், களியாட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இறுதியில் தம் உயிரை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.