செங்கம்: செங்கத்தில் தாலி கட்டும் நேரத்தில் மின்சாரவாரிய என்ஜினீயர் மணமகன் மாயமானார். இதனால் திருமணம் நின்றது.
மின்வாரிய செயற்பொறியாளர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துக்காபேட்டையை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் பிரபாகரன் (வயது 26), பி.இ.படித்துள்ள இவர், புதுப்பாளையத்தில் மின்வாரிய உதவி செயற் பொறியாளராக வேலைபார்க்கிறார்.
இவருக்கும் வேலூர் மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த முதுநிலை பட்டதாரி பெண் ஒருவருக்கும் பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
திருமணம்
இதற்காக திருமண பத்திரிகை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர். பெரியோர்கள் நிச்சயித்தபடி திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.
செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் திரண்டிருந்தனர். மணமக்கள் அழைப்பும் நடந்தது.
மணமகன் திடீர் மாயம்
இதில் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் மணமகன் பிரபாகரன் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் திருமணமண்டபத்திற்கு திரும்பவில்லை.
தாலிகட்டும் நேரம் நெருங்கியதால் மணமகன் மற்றும் மணமகளின் வீட்டார் இடையே பரபரப்பு ஏற்பட்டது. மாப்பிள்ளையை பல இடங்களில் தேடினர். போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
திருமணம் நின்றது
முகூர்த்த நேரம் முடிந்தும் மணமகன் வராததால் திருமணம் நின்றது. இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பெண் வீட்டார் செங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப்பதிவு செய்து திருமணம் பிடிக்காமல் மணமகன் மாயமானாரா? அல்லது வேறுபெண்ணுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாணவருடன் ஓடிப்போன ஆசிரியை, கோர்ட்டில் ஆஜர்: விருப்பப்படி வாழ கோர்ட்டு உத்தரவு
22.04.2015
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து மாணவருடன் சென்ற ஆசிரியை கோர்ட்டில் ஆஜர் ஆனார். அவர்கள் இருவரும் தங்களது விருப்பப்படி வாழ கோர்ட்டு உத்தரவிட்டது.
மாணவருடன் சென்ற ஆசிரியை
திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் தேவராஜ். சுமைதூக்கும் தொழிலாளி. அவருடைய மகள் செபாஸ்டின் சாரதி (வயது 22). ஆசிரியை பயிற்சி முடித்துள்ள இவர், திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் பயிற்சி கல்லூரியில் (டுட்டோரியல்) வேலை செய்து வந்தார்.
அந்த கல்லூரியில், திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடியை சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் படித்தார்.
அவருக்கு, ஆசிரியை செபாஸ்டின் சாரதி பாடம் நடத்தினார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திடீரென மாயமாகி விட்டனர்.
கோர்ட்டில் ஆஜர்
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் செபாஸ்டின் சாரதியின் தந்தை தேவராஜ் புகார் செய்தார்.
அதன்பேரில், ஆசிரியையை கடத்தி சென்று விட்டதாக அந்த மாணவர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.
இந்த நிலையில் செபாஸ்டின் சாரதியும், அந்த மாணவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி கிராமத்தில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும், திண்டுக்கல் 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விருப்பப்படி வாழ உத்தரவு
அப்போது தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் விருப்பப்பட்டு மாணவருடன் சென்றதாகவும் செபாஸ்டின் சாரதி கூறினார். மேலும் தனது விருப்பப்படி, சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அவரது விருப்பப்படி வாழ்வதற்கு மாஜிஸ்திரேட்டு வேதகிரி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அந்த மாணவருடன், ஆசிரியை செபாஸ்டின் சாரதி சென்று விட்டார்.