திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வீட்டிற்கு செல்வதற்காக அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று கைதான இவர் 22 வயதுடையவர் எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
சிறுமி அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த வேளை, அங்கு அக்கரைப்பற்று – டீன்ஸ் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவர் வந்துள்ளார்.
சிறுமியுடன் பேசிய அவர் பல்வேறு ஆசை வார்த்தைகளையும் கூறி அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சம்புநகர் பிரதேசத்தில் தனிமையிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை அன்றைய தினம் இரவு நண்பரின் வீட்டில் விட்டுவிட்டு அவர் வெளியேறியுள்ள நிலையில், இரு பெண்களை திருமணம் முடித்த ஒருவர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
பின் சிறுமியை அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து விட்விட்டு அவர் தப்பி ஓடியுள்ளார்.
இந்த நிலையில் சிறுமி நேற்று புதன்கிழமை (22) வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து அவர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பின்னர் அக்கரைப்பற்று – டீன்ஸ் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேகநபரை நேற்று மாலை கைது செய்துள்ளதுடன், சம்புநகர் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றைய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.