மஹிந்த இல்லாது கோத்தபாய ராஜபக்ஷ நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாடு சுத்தமாகியிருக்கும். தலைசிறந்த தலைவர் கோத்தபாய என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ஷவை தண்டித்தால் தீக்குளிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பொது பலசேனா அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் பேதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் முஸ்லிம்களின் அராஜகம் தலை தூக்கிவிட்டது. இதற்கு பிரதான காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.
அவரின் அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்களை பாதுகாத்தமையும் முஸ்லிம்களின் உரிமைகள் என்ற பெயரில் அவர்களின் தீவிரவாத செயற்பாடுகளை அமைதியாக வேடிக்கை பார்த்தமையுமே இன்று நாட்டை பாதித்துள்ளது.
அவரின் அமைதியே இன்று அழிவின் பக்கம் நாட்டை கொண்டு சென்றுள்ளது. எனினும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அரச ஊழயராக இருந்தாலும் அவர் பல சந்தர்ப்பங்களில் நல்ல தீர்வுகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது முதற் கொண்டு நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு சென்றது வரை முழுமையான புகழும் கோத்தாபய ராஜபக்ஷ்விற்கே சேரும்.
அவரின் முயற்சியே இன்று தமிழ் சிங்க முஸ்லிம் மக்களை அமைதியாக வாழ இடம் கொடுத்துள்ளது. அதே போல் ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போல் இந்த நாட்டில் வேறு ஒரு அரசாங்கம் இருந்ததில்லை.
இனி இருக்கப் போவதும் இல்லை. அதிலும் குறிப்பாக கோத்தாபய ராஜபக்ஷ என்ற நபர் சாதாரண மனிதர் இல்லை.
அவர் ஒரு இரும்பு மனிதர். நாட்டில் முஸ்லிம்களின் கரம் ஓங்கியபோதிலும் தீவிரவாதம் பரவிய போதும் எமக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்தவர் கோத்தாபயவே ஆவார்.
அவரைப்போல் ஒரு தலைவர் வேறு எவரும் இல்லை. அதே போல் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோரும் சிறந்த தலைவர்களே,
எனினும் இன்று அவர்களுக்கு எதிராகவே சூழ்ச்சிகள் பலமடைந்துவிட்டது. ராஜபக்ஷ குடும்பத்தினை தண்டிக்க துடிக்கும் அரசாங்கம் ரிஷாத் பதியுதீன், ராஜித ஆகியோரே ஏன் விட்டுவைத்துள்ளது.
மஹிந்த அரசாங்கத்தில் இவர்கள் செய்த குற்றச்சாட்டுக்கள் ஏன் மறைக்கப்படுகின்றது. இவர்கள் தற்போது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் காரணமே இவர்களின் தவறுகள் மூடி மறைக்கப்படுகின்றது.
கோத்தாபய ராஜபக்ஷ மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்த அவரை தண்டிக்க நினைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். கோத்தாபய ராஜபக்ஷ ஒரு இரும்பு மனிதர்.
அவர் மீது நாட்டு மக்கள் அதீத அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் அவரை தண்டிக்க நினைத்தால் மக்கள் சார்பில் பலர் தீக்குளிப்பார்கள்.
அதில் எமது உயிரும் உள்ளடங்கும் என்பதை அரசாங்கத்திற்கு தெரிவிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.