கரணவாய், தெற்கு வெற்றிக்காடு பகுதியில் சனிக்கிழமை(25) இரவு உட்புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்த கணவன், மனைவியை தாக்கிவிட்டு, மனைவியிடம் இருந்த 4 ½ பவுண் நகை மற்றும் 36,000ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டில் கணவனும் மனைவியும் தூங்கிய நேரம் பார்த்து, வீட்டு யன்னல் கம்பியினை வளைத்து நுழைந்த திருடர்கள், அலுமாரியில் இருந்த பணத்தினை திருடியுள்ளனர்.
இதன்போது, திருடர்களின் சத்தம் கேட்டு விழித்தெழுந்த கணவன் மற்றும் மனைவியை தாக்கிவிட்டு, கழுத்தில் இருந்த 2பவுண் சங்கிலி, 2பவுண் வளையல், மற்றும் ½ பவுண் மோதிரம் என்பனவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை
26-04-2015
யாழ்ப்பாணம் அல்வாய் வடக்கு பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தையொருவர், சனிக்கிழமை (25) அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி திருச்செல்வம் (வயது 48) என்பவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் வீட்டுக்கு அயல் வீட்டிக்குள் நுழைந்த சில நபர்கள், அங்கிருந்தவர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
தாக்குதல் நடத்தியவர்களை துரத்திச் சென்ற போது, அந்தக் கும்பல் இவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
சடலம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர்.