செம்மர கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் தேடப்பட்ட நடிகை நீது அகர்வால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஒரே நேரத்தில் 2 பேருடன் அவர் குடும்பம் நடத்தியது தெரியவந்துள்ளது.

செம்மரகடத்தல்

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் மலையில் செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி கூலித்தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து செம்மர கடத்தலை தடுக்க அம்மாநில அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செம்மரங்களை வெட்டும் தொழிலாளர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் அளிக்கும் தகவலின்பேரில் செம்மரகடத்தலில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்களை கைது செய்து வருகிறார்கள்.

தயாரிப்பாளர் கைது

செம்மரகட்டை கடத்தல் தொழிலில் ஆந்திரா, தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள், படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

சென்னையைச் சேர்ந்த நடிகர் சரவணன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், சினிமா தயாரிப்பாளருமான மஸ்தான் வலி என்பவர் கைது செய்யப்பட்டார். எலுமிச்சை வியாபாரியாக இருந்த இவர், செம்மரகடத்தல் மூலமாக குறுகிய காலத்தில் பணம் சம்பாதித்தவர்.

நடிகை நீது அகர்வால்

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவருடன் மனைவி போல் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்த பிரபல தெலுங்கு நடிகை நீது அகர்வால்(வயது 27) செம்மரகடத்தலில் முக்கிய பங்காற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நீது அகர்வால் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் சரளமாக இந்தி, ஆங்கிலம் பேசுபவர் என்பதால் அவர் மூலம் மஸ்தான் வலி தனது செம்மரகடத்தல் தொழிலை வடமாநிலங்களில் விரிவுபடுத்தினார்.

கடத்தல்காரர்களுக்கு நீது அகர்வாலின் வங்கி கணக்கு மூலம் பணபரிமாற்றம் செய்து உள்ளார். இவர் பிரேமபிரயாணம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

தப்பி ஓட்டம்

மஸ்தான் வலி கைதாகும்போது நீது அகர்வால் அவருடன் தங்கி இருந்தார். செம்மரகடத்தல் தொழிலில் அவருக்கும் முக்கிய பங்கு இருப்பது தெரியவந்ததும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய முயன்றனர் அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார்.

அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பெங்களூரு, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களுக்கு விரைந்தனர்.

நடிகை கைது

ஐதராபாத்தில் நீது அகர்வாலுக்கு சொந்தமான வீடு உள்ளது. அங்கு போலீசார் சென்றபோது வேலைக்காரி மட்டும் ஒரு குழந்தையுடன் இருந்தார். இருந்தாலும் வீட்டில் ஏதாவது துப்பு கிடைக்குமா? என்று போலீசார் அவரது வீட்டை சோதனையிட்டனர்.

வீட்டில் செம்மரகடத்தல் தொடர்பாக ஆவணங்களோ, விலை உயர்ந்த பொருட்களோ, நகை, பணமோ இல்லை. அவைகளுடன் நீது அகர்வால் தப்பி இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இருந்தபோதிலும் அவரது வீட்டை தனிப்படை போலீசார் இரவு பகலாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நீது அகர்வால் நேற்று காலை கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

2 பேருடன் திருமணம்

நீதுஅகர்வால் பற்றி விசாரித்தபோது போலீசாருக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. அவருக்கு ஏற்கனவே ரத்தன் என்பவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

அதன் பின்னர்தான் மஸ்தான்வலி தயாரித்த படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் பழக்கமாகியது. செம்மரகடத்தல் தொழிலில் நேரடியாக பங்கேற்றார். அந்த பணத்தின் மூலம் பல இடங்களில் ஏராளமான சொத்துக்களை வாங்கினார்.

மஸ்தான் வலியுடன் மனைவியாக குடித்தனம் நடத்திய அதே வேளையில் ஐதராபாத்தில் உள்ள சொந்த வீட்டில் தனது கணவர் ரத்தனுடனும் குடும்பம் நடத்தி வந்தார்.

குழந்தையை பார்க்க வந்தபோது சிக்கினார்?

போலீசார் அவரது வீட்டை சோதனையிட சென்ற போது வீட்டில் பெண் குழந்தையும், குழந்தையை பராமரித்து வந்த வேலைக்காரியும் மட்டுமே இருந்தனர்.

நகை பணத்துடன் கணவர் ரத்தனுடன் தப்பிச் சென்றது தெரிய வந்தது. எப்படியும் குழந்தையை பார்க்க அவர் வருவார் என போலீசார் கருதினார்கள்.

அதனால் அவரது வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது தான் அவர் சிக்கி இருக்கலாம் என தெரிகிறது. ஆனால் போலீசார் அதுபற்றிய விவரங்களை கூற மறுத்து விட்டனர்.

நீது அகர்வாலிடம் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் எதுவும் கூற முடியாது என கர்னூல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிகிருஷ்ணன் கூறினார்.

Neetu-Agarwal-arrestகதறி அழுத நீது அகர்வால்

கர்னூல் மாவட்டம் ருத்ராவரம் போலீசார் நீது அகர்வாலை கைது செய்து அழைத்து வந்தபோது, அவர் தனது முகத்தை மறைத்து துணி கட்டி இருந்தார். அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் கூடி நடிகையை படம் பிடிக்க முயன்றனர்.

அப்போது அவர்கள் முன்னிலையில் நீதுஅகர்வால் கதறி அழுதார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் மஸ்தான் வலியிடம் நான் சரண் அடைந்து விட்டேன். மஸ்தான் வலி என்னை பல முறை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளார்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீது அகர்வால் கோவில குண்டலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மே 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் அவர் நந்தியாலா சிறையில் அடைக்கப்பட்டார். நீது அகர்வாலை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாக கர்னூல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் தெரிவித்தார்.

Share.
Leave A Reply