வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ, தன் மீது மாம்பழத்தை எறிந்த பெண்ணுக்கு வீடொன்றை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ, வெனிசூலாவின் மத்திய பிராந்திய மாநிலமான அரகுவாவில் அண்மையில் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது அவரை காண்பதற்கு பலர் திரண்டிருந்தனர்.
அப்போது மக்கள் மத்தியிலிருந்து பெண்ணொருவர், ஜனாதிபதி மதுரோவை நோக்கி பஸ்ஸின் ஜன்னலுக்கூடாக மாம்பழமொன்றை வீசினார். அம்மாம்பழம் ஜனாதிபதி மதுரோவை தாக்கியது.
பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தளங்களிலும் வேகமாக பரவியிருந்தது.
ஆனால், அம்மாம் பழத்தை தொலைக்காட்சியில் காண்பித்த ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ, மேற்படி அப்பழத்தில் குறிப்பொன்று எழுதப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
முடிந்தால், என்னை தொலைபேசியில் அழையுங்கள் என அதில் எழுதப்பட்டு, தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்பெண்ணுடன் அதிகாரிகள் தொடர்புகொண்ட போது, அப்பெண், தனக்கு வசிப்பதற்கு வீடு இல்லாமல் தவிப்பதாக தெரிவித்தாராம்.
இது தொடர்பான விசாரணைகளையடுத்து, அப்பெண்ணுக்கு வீடொன்றை தான் ஒதுக்கவுள்ளதாக வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ பகிரங்கமாக அறிவித்தார்.
அம்மாம்பழத்தை தான் உண்ணவுள்ளதாகவும் அவர் கூறினார். 52 வயதான ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ முன்னர் ஒரு காலத்தில் பஸ் சாரதியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.