தன்னை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரை கைது செய்யக்கோரி திருச்சி அரசு மருத்துவமனையில், பெண் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது புகார்
திருச்சி கே.கே.நகர். இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா(வயது 35). இவருக்கு ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பரிமளா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு இவருக்கும், திருச்சியில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
முருகேசன் மனைவியை விட்டு பிரிந்து பரிமளாவுடன் வசித்து வந்தார். அதன்பிறகு லஞ்ச வழக்கில் சிக்கிய இன்ஸ்பெக்டர் முருகேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சில மாதங்கள் கழித்து மீண்டும் பணிக்கு சேர்ந்த அவர், பரிமளாவை தவிர்த்துவிட்டு மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.
பின்னர் இன்ஸ்பெக்டர் முருகேசன் திருச்சியில் இருந்து நெல்லை மாவட்டம் சுரண்டை போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி திருச்சிக்கு வந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் அதிகாலை 2.30 மணிக்கு இந்தியன் வங்கி காலனியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரிமாள போலீசில் புகார் செய்தார்.
வழக்கு பதிவு
இது தொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா விசாரணை நடத்தினார். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது பிரிவு 417 ஏமாற்றுதல், பிரிவு 376 பலாத்காரம் செய்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.
பாலியல் பலாத்கார புகாரில் சிக்கி உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் நெல்லை மாவட்டம் சுரண்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்ததாகவும், பின்னர் அவர் அங்கிருந்து வடக்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த பரிமளா திருச்சி அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவமனையில்உண்ணாவிரதம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் என்னை பலாத்காரம் செய்ததை உறுதிப்படுத்த திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்ந்தேன். இங்கு 3 நாட்களாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன்.
மேலும், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 3 நாட்களாக சாப்பிடாமல் மருத்துவ மனை வார்டில் உண்ணாவிரதம் இருந்து வருகிறேன்.
நான் மருத்துவமனையில் சிகிச்சை சேர்ந்த அன்று இங்கு வந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் என்னை தர,தரவென இழுத்து சென்று கட்டாயப்படுத்தி ஆட்டோவில் ஏற்றி சென்றார்.
பின்னர் ஓரிடத்தில் ஆட்டோவை நிறுத்தி வழக்கை வாபஸ் வாங்கும்படி வற்புறுத்தினார். நான் அவரிடம் இருந்து தப்பி மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன்.
அவர் என்னை இழுத்து சென்றது மருத்துவமனையில் உள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடருவேன். மேலும், மருத்துவமனையில் இருந்து வெளியேறி திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று உண்ணாவிரதம் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய திருச்சி பெண் தற்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.