இளவரசர் வில்லியம் பிறப்பதற்கு முன்பாக, வாடகைத் தாய் மூலம் பிறந்த இக்குழந்தைக்கு சாரா என பெயரிடப்பட்டதாகவும் 33 வயதான அவர் அமெரிக்காவில் வசிப்பதாகவும் குளோப் எனும் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இளவரசர் சார்ள்ஸ் – டயானா தம்பதிகளின் மூத்த புதல்வரான முடிக்குரிய இளவரசர் வில்லியம் மற்றும் கேம்பிரிட்ஜ் சீமாட்டி தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ள நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அழிக்கப்படவிருந்த கருவொன்றை மருத்துவர் ஒருவர் இரகசியமாக தனது மனைவியின் வயிற்றில் வளரச் செய்ததன் மூலம் இக்குழந்தை பிறந்ததாக அச்சஞ்சிகை தெரிவித்துள்ளது.
1981 ஜுலை 29 ஆம் திகதி இளரவசர் சார்ள்ஸ் – டயானா திருமணம் நடைபெற்றது. 1982 ஜூனில் இத்தம்பதிகளின் மூத்த மகனான இளவரசர் வில்லியம் பிறந்தார்.
அதன் பின் இளவரசர் ஹரி 1984 ஆம் ஆண்டு பிறந்தார். ஆனால், சாரா எனும் குழந்தை வில்லியம் பிறப்பதற்கு 11 மாதங்களுக்கு முன்னர் பிறந்ததாக கூறப்படுகிறது.
குளோப் சஞ்சிகை வெளியிட்டுள்ள செய்தியில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சார்ள்ஸ் -டயானா திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கு முன்னர், கருத்தரிக்கும் ஆற்றலை டயானா கொண்டுள்ளாரா என்பதை மருத்துவ ரீதியாக சோதிப்பதற்கு 2 ஆம் எலிஸபெத் ராணியார் உத்தரவிட்டாராம்.
இதனால், இளவரசர் சார்ள்ஸின் உயிரணு மற்றும் அப்போது 19 வயது யுவதியாக இருந்த டயானா ஸ்பென்ஸரின் முட்டை பெறப்பட்டு செயற்கை முறையில் கருக்கட்டல் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனை வெற்றியளித்து கருக்கட்டல் நடைபெற்றபின் சார்ள்ஸ் டயானா திருமண நிச்சயதார்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாம்.
செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மேற்படி கருவை சோதனையின் பின்னர் அழித்து விடுவதற்கே திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இச்சோதனையை நடத்திய மருத்துக் குழுவிலுள்ள மருத்துவர் ஒருவர், இக்கருவொன்றை தனது மனைவியின் வயிற்றில் இரகசியமாக வளரச் செய்தார்.
இதனால் அரச குடும்பத்தின் வாரிசு மேற்படி மருத்துவரின் மனைவியின் வயிற்றில் வளர்ந்தது.
இதன் மூலம் பிறந்த பெண் குழந்தைக்கு சாரா என பெயரிடப்பட்டது. அமெரிக்காவில் வசிக்கும் சாராவுக்கு 33 வயதாகிறது.
சாராவை பெற்று வளர்த்த தம்பதிகள் இருவரும் விபத்தொன்றில் உயிரிழந்த பின்னர், தான் செயற்கை கருக்கட்டல் மூலம் உருவாக்கப்பட்ட குழந்தை என்பதை டயறிக் குறிப்புகளின் மூலம் அறிந்துகொண்டாராம் சாரா.
இளவரசி டயானா பாரிஸ் நகரில் உயிரிழப்பதற்கு காரணமான சம்பவம் ஒரு விபத்தல்ல எனவும் அது ஒரு கொலைச் சதி எனவும் தகவல்கள் வெளியான பின்னர் அச்சம் காரணமாக சாரா அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தாராம்.
சார்ள்ஸ் -டயானா தம்பதிகளின் புதல்வரான இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி இளவரசர் கேம்பிரிட்ஜ் சீமாட்டி (கேட்) ஆகியோருக்கும் இவ்விடயம் தெரியும் எனவும் குளோப் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
கேம்பிரிட்ஜ் சீமாட்டி அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்தமைக்கான உண்மையான நோக்கம் சாராவை சந்திப்பதே எனவும் மேற்படி சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இளவரசி டயானா திருமணத்துக்கு முன்னர் மகப்பேற்று மருத்துவரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற போதிலும் அவருக்கு இரகசிய பெண்குழந்தை உள்ளது என்பது அபத்தமானது என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.