மத்திய கிழக்கில் அரபு – இஸ்ரேல் பிரச்சினை காஸா நிலப்பரப்பிலும் மேற்குக்கரையிலும் மட்டும் முடக்கப்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் இப்போது பெரும் பிரச்சினையாக இருப்பது சவூதி அரேபியாவிற்கும் ஈரானிற்கும் இடையிலுள்ள ஆதிக்கப் போட்டியே.
இதனால் பல உயிரிழப்புக்களும் உடமை இழப்புக்களும் ஏற்பட்டது மட்டுமல்ல பலரை இடப்பெயர்வுக்கும் உள்ளாக்கியுள்ளது.
அரபு – இஸ்ரேலியப் பிரச்சினை இப்போது இல்லை.
வெறும் பலஸ்தீன – இஸ்ரேலியப் பிரச்சினை மட்டுமாகவே இருக்கின்றது என்று சொல்லுமளவிற்கு நிலைமை மாறிவிட்டது. சவூதி அரேபியாவிற்கும் ஈரானிற்கும் இடையிலுள்ள ஆதிக்கப் போட்டி ஸூன் –ஷியா இஸ்லாமியர்களுக்கு இடையிலான போர்வையில் மூடப்பட்டிருக்கின்றது.
மத்திய கிழக்கிற்கு போன கப்பல்கள்
யேமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தவுடன் அங்கு பல நாடுகள் தமது கப்பல்களை அனுப்பி யேமனில் சிக்குண்ட தமது குடிமக்களை மீட்டன.
இந்தியா கப்பல் மூலம் தன் குடிமக்களை அண்டை நாடான ஜிபூட்டிக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பியது.
சீனாவும் தனது நாட்டு மக்களைக் கப்பல் அனுப்பி மீட்டது. அமெரிக்கா தனது நாட்டு மக்களில் சிலரை யேமனில் இருக்க வைத்தது.
தேவை ஏற்படின் தன் மக்களை மீட்பது என்ற போர்வையில் ஒரு படை நடவடிக்கையைச் செய்வதற்காக இருக்கலாம்.
சவூதி அரேபியா தலைமையிலான நாடுகள் யேமனில் ஷியா முஸ்லிம் பிரிவினரான ஹௌதிக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் செய்யத் தொடங்கிய பின்னர் ஈரான் தனது நாட்டுப் போர்க் கப்பல்கள் இரண்டை யேமனை ஒட்டிய ஏடன் வளைகுடாவை நோக்கி அனுப்பியது.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா யூ.எஸ்.எஸ். தியோடோர் ரூஸ்வெல்ற் என்னும் விமானம் தாங்கிக் கப்பலையும் யூ.எஸ்.எஸ். நோர்மண்டி என்னும் வழிகாட்டி ஏவுகணைகள் வீசும் கப்பலையும் ஏடன் வளைகுடாவிற்கு அனுப்பியது.
The Iranian warship Alborz, foreground, prepares before leaving Iran’s waters on April 7, 2015.
அமெரிக்கா: முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
யேமனில் அரபு நாட்டுப் படைகளை தாக்குதல்கள் செய்ய விட்டு அமெரிக்கா பின்னால் நின்று உதவி செய்கின்றது.
அரபு நாட்டுப் போர் விமானங்களுக்கு வானத்தில் வைத்து எரிபொருள் நிரப்பும் வேலைகளை அமெரிக்க விமானங்கள் செய்கின்றன. அமெரிக்காவின் இந்தத் தந்திரோபாய மாற்றம் எப்படி வேலை செய்யப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
செத்துப் பழம் கொடுத்த பழவியாபாரி
2010ஆம் ஆண்டு டியூனிசியாவில் தெருவோரத்தில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞனின் தற்கொலை அரபு வசந்தம் என்னும் பெயரில் டியூனிசியாவிலும், எகிப்திலும், லிபியாவிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.
அரபு வசந்தம் சிரியாவில் இன்றுவரை தொடரும் பெரும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது. ஸூன்னி முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட சிரியாவில் ஸூன்னி முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்களின் ஆட்சி நடக்கின்றது.
சவூதி அரேபியா அங்கு ஸூன்னி முஸ்லிம்களின் ஆட்சியைக் கொண்டுவர முயல்கின்றது. ஈரான் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைத் தக்கவைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றது.
அரபு வசந்தம் என்னும் பெயரில் பஹ்ரேனில் சிறுபான்மையினரான ஸூன்னி முஸ்லிம்களின் ஆட்சியை அகற்ற ஈரான் முயற்சி எடுத்தது.
சவூதி அரேபியா அங்கு தன் படைகளை அனுப்பி ஸூன்னி முஸ்லிம் மன்னரின் ஆட்சியைக் காப்பாற்றியது.
எகிப்தில் படைத்துறையினர் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக மதசார்பற்ற இளையோரால் செய்யப்பட்ட கிளர்ச்சி ஹூஸ்னி முபாரக்கை ஆட்சியிலிருந்து விரட்டியது.
ஆனால் பின்னர் தேர்தலின் போது புரட்சியை முன்னெடுத்த இளையோர் ஓரம் கட்டப்பட்டு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது.
மீண்டும் இளையோர் கிளர்ச்சி செய்ததைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் படைத்துறையினர் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இஸ்லாமிய சகோதரத்துவமைப்பின் ஆட்சியை சவூதி அரேபியா விரும்பவில்லை. ஈரான் ஆதரவு கொடுக்க முன்வந்தது.
மக்களாட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற வகையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை அமெரிக்கா ஆதரிப்பது போல் நாடகமாடியது.
இஸ்ரேலின் எழுச்சிக்குப் பிறகு எகிப்து, சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகள் அடங்கிப் போயின. சவூதி அரேபியா இஸ்ரேலுடன் ஒரு கள்ளத் தொடர்பை வைத்திருக்கின்றது.
இஸ்ரேலுக்கு சவால் விடும் நாடாக ஈரான் மட்டுமே இருக்கின்றது எனச் சொல்லும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.
ஈரான் தனது படைக்கலனை உள்நாட்டு உற்பத்திகளாலும் சீனா, ரஷ்யா, வட கொரியா ஆகியவற்றில் இருந்து வாங்கும் தொழில்நுட்பத்தாலும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
ஈரானின் பிராந்திய ஆதிக்கத்தை சவூதி அரேபியா ஊதிப் பெரிதுபடுத்தி தனது ஆதிக்கத்தை வளர்க்கின்றது என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.
பொருளாதாரம்
2008ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் உலகப் பொருளாதார வீழ்ச்சியும் வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட பெருமளவு பெற்றோலிய எரிபொருள் இருப்பும் எரிபொருள் விலையை உலகச் சந்தையில் விழச் செய்தது.
இது மத்திய கிழக்கின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே குறைவான பொருளாதார வளர்ச்சி, பெருமளவு வேலைவாய்ப்பின்மை, அதிலும் இளையோர் வேலைவாய்ப்பின்மையைக் கொண்ட மத்திய கிழக்கில் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
எகிப்திலும் டியூனிசியாவிலும் வேலையின்மை 13 விழுக்காடாக உள்ளது. இதில் இளையோரில் வேலையற்றிருப்போர் 29விழுக்காட்டிற்கும் அதிகமாகும். அல்ஜீரியாவில் 12 விழுக்காடு மக்கள் வேலையின்றி இருக்கின்றனர்.
சீனாவும் மத்திய கிழக்கும்
சீனாவின் எரிபொருள் தேவையின் அரைப்பங்கு வளைகுடாப் பிராந்தியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
சீனாவின் எரிபொருள் தேவையின் மூன்றில் ஒரு பகுதி ஐக்கிய அரபு அமீரகம், ஓமா, பாஹ்ரேன், கட்டார், குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
அதில் பெரும்பகுதி சவூதியில் இருந்தே பெறப்படுகின்றது. இதனால் மத்திய கிழக்கில் உறுதியான நிலை சீனாவிற்கு அவசியமானதாகும்.
இதனால் அமெரிக்காவின் பல நடவடிக்கைகளுக்கு சீனா முட்டுக்கட்டை போடுவதில்லை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட ஈரானுடனும் சவூதி அரேபியாவுடனும் நல்லுறவைப் பேணுவதற்கே சீனா பெரும்பாடு படுகின்றது.
ஈரானுடனான உறவை சீனா பெரிதும் விரும்பினாலும் ஈரானின் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பான ஆறு தீர்மானங்களை சீனா வீட்டோ செய்யவில்லை.
2015 மார்ச் மாதத்தில் யேமனில் உள்நாட்டுப் போர் என்றவுடன் தனது கடற்படையை அனுப்பி தனது குடிமக்களை சீனா மீட்டது.
அத்துடன் 2015 ஏப்ரலில் சீன அதிபர் சவூதி அரேபியாவிற்கும் எகிப்திற்கும் மேற்கொள்ளவிருந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டது.
சீனாவின் மத்திய கிழக்குக் கொள்கை பெரும்பாலும் வர்த்தக ரீதியானதே. சிரியப் பிரச்சினைக்கு சீனா முன்வைத்த நான்கு அம்சத் திட்டம் கேலிக்குட்படுத்தப்பட்டது.
மத்திய கிழக்கில் சீனாவின் படைத்துறை ஆதிக்கம் கணிசமானதல்ல ஆனால் அதிகரித்து வருகின்றது. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் இஸ்லாமியத் தீவிரவாதம் சீனாவில் வாழும் இஸ்லாமியர்களையும் பாதிக்கக் கூடியது.
ஐ. எஸ். அமைப்பின் கரிசனைகளில் ஒன்றாக கிழக்கு துருக்கிஸ்த்தானும் இருக்கின்றது. கிழக்கு துருக்கிஸ்தான் என்பது சீனாவின் சின் ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் இன இஸ்லாமியர்கள் வேண்டும் தனிநாடு ஆகும்.
இதனால் இஸ்லாமியத் தீவிரவாதப் பிரச்சினை மேற்குலகின் பிரச்சினை என சீனா விலகியிருக்க முடியாது.
கடந்த முப்பது ஆண்டுகளாக சீனா மத்திய கிழக்கில் ஒரு இலவச சவாரி செய்து கொண்டிருக்கின்றது என ஒபாமா விபரித்தமைக்கு நிறைய உட்பொருள் உண்டு. அமெரிக்கா பேணிய எரிபொருள் விநியோக சுமுக நிலையில் சீனா இலகுவாக தனது எரிபொருள் கொள்வனவைச் செய்தது.
ரஷ்யாவும் மத்திய கிழக்கும்
எகிப்தும் இஸ்ரேலும் 1979ஆம் ஆண்டு செய்துகொண்ட காம்ப் டேவிட் உடன்படிக்கையின் பின்னர் மத்திய கிழக்கில் ரஷ்யாவின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது.
ரஷ்யாவிடமிருந்து பெருமளவு படைக்கலன்களைக் கொள்வனவு செய்து கொண்டிருந்த மும்மர் கடாஃபியின் ஆட்சியைக் கவிழ்க்கும் போது ரஷ்யா வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க முடிந்தது.
ரஷ்யாவின் வெளிநாட்டுக் கொள்கையை அங்குள்ள மரபு வழி கிறிஸ்தவத் திருச்சபையின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து வகுத்துக் கொள்வதால் அமெரிக்காவைக் கடுமையாக எதிர்க்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் ரஷ்யா தொடர்புகளை ஏற்படுத்தவில்லை.
மாறாக ரஷ்யா அமெரிக்காவுடன் உளவுத் தகவல்களைப் பகிர்ந்தும் கொள்கின்றது. ரஷ்யாவின் செஸ்னியப் பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டிய பணியும் ரஷ்யாவிற்கு உள்ளது.
இவர்களுக்கு மத்திய கிழக்கில் இருக்கும் தீவிரவாதிகள் உதவுவதையும் ரஷ்யா ஒழிக்க விரும்புகிறது. மத்திய கிழக்கில் ரஷ்யாவின் ஒரு பிடியாக சிரியா இருக்கின்றது.
சிரியாமீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாமல் ரஷ்யா தடுத்துக் கொண்டிருக்கின்றது. ரஷ்யாவின் சிரிய நிலைப்பாட்டை சவூதி அரேபியா கடுமையாக எதிர்க்கின்றது.
ஈரானுக்கு ஏவுகணை எதிர்ப்பு முறைமை ரஷ்யா விற்பனை செய்ய எடுத்த முடிவு மத்திய கிழக்கில் ரஷ்யா ஈரானுடன் இணைந்து தனது ஆதிக்கத்தை மீள் உருவாக்க முயல்கின்றதா? என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.
ரஷ்யா தனது நிதி நெருக்கடியைச் சமாளிக்கத்தான் ஈரானுக்கு தனது எஸ்-300 என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை விற்பனை செய்ய முன் வந்ததாகவும் கருதப் படுகின்றது.
மதபோதகர் ஆட்சியா? மன்னர் ஆட்சியா
ஈரானுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான ஆதிக்கப் போட்டி தற்போது சிரியா, ஈராக், யேமன் ஆகிய நாடுகளில் உக்கிரமாக நடக்கும் உள்நாட்டுப் போரிற்கு முக்கிய காரணியாக உள்ளது.
சவூதி அரேபியாவில் ஒரு குடும்பம் செய்யும் மன்னராட்சி நடக்கின்றது. ஈரானில் மதபோதகர்களின் தலைமையிலும் கட்டுப்பாட்டிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரும் பாராளுமன்றமும் ஆட்சி செய்கின்றன.
ஈரானில் சியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். சவூதியில் ஸூன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
ஈரானில் பார்சிய மொழியும் சவூதியில் அரபு மொழியும் பெரும்பான்மையினரால் பேசப்படுகின்றது. இவை வேறுபாடுகள் மட்டுமே. முரண்பாடு அல்ல.
சவூதி அரேபியாவில் உள்ள தண்டனை முறைமைக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களின் அவர்கள் செய்யும் தண்டனை முறைமைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை எனச் சொல்லலாம்.
இரு தரப்பினரும் தலைகளைக் கொய்து யூரியூப்பில் அதன் காணொளிகளைப் பதிவேற்றம் செய்கின்றனர்.
உண்மையான முரண்பாடு ஈரானிய மதபோதகர்களின் ஆட்சி சவூதியின் மன்னராட்சிக்கு ஆபத்தானது. தமது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள சவூதி மன்னர் குடும்பம் இஸ்ரேலுடன் கூட இரகசியமாக இணைந்து செயற்படத் தயங்குவதில்லை. ஆனால் அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் அவசியம் ஏற்படின் ஈரானுடன் கைகோர்க்கத் தயங்காது.
-வேல் தர்மா-