யாழ்.கட்டுவன் பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை சென்ற மாத்தையா குழுவினர் என அழைக்கப்படுவோர் வீடு தேடிச் சென்று இளைஞரொருவரை வாளால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுச் சிறிது நேரத்தில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மாத்தையா குழுவெனக் கூறப்படும் குழுவொன்றைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் தெல்லிப்பழைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துக்கான காரணம் பற்றி இதுவரை தெரியவரவில்லை. இதே பகுதியைச் சேர்ந்த எஸ்.நிதர்சன் என்ற இளைஞரே குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்தவராவார்.
குட்டுவன்,ஏழாலை முதலான இடங்களில் மாத்தையா குழுவினர் முன்னரும் பல அட்டகாசங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கும் பொதுமக்கள் இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்தச் சட்டம் தன் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தடம்மாறி வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பஸ்
02-05-2015
காரைநகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மானிப்பாய் வழியாக வந்த பஸ் ஒன்று, ஆனைக்கோட்டை குருசு மதவடி சந்தியை தாண்டி நூறு மீற்றர் தூரத்தில் தடம் மாறி அருகில் உள்ள வீட்டின் முன் மதிலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது.
காரைநகர் – யாழ்ப்பாணம் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற தனியார் போக்குவரத்து பஸ்சே இவ்வாறு மதிலோடு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ்ஸில் இருபதிற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த போதிலும் எவரும் காயங்கள் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
அத்துடன் பஸ்ஸின் முன்பகுதி மதிலோடு மோதியதில் பேருந்து சிதைந்து காணப்பட்ட போதிலும் சாரதி காயங்கள் எதுவும் இன்றி உயிர்பிழைத்துள்ளார்.