அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள சமூகக் கூடம் ஒன்றில் முகமது நபியைப் பற்றி கேலிச் சித்திரங்களை வரையும் போட்டியொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கே வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, காவலர்களின் பதில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவர் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அமெரிக்காவின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பான FBI சோதனைகளை நடத்தியுள்ளது.
கொல்லப்பட்டவர்கள் யார் என்பதை தாங்கள் அடையாளம் கண்டுவிட்டதாக டல்லஸ் காவல்துறையினர் தெரிவித்திருந்தாலும், மேலதிக விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. இருவரில் ஒருவர் பயங்கரவாத குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்கு உள்ளானவர் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர்கள் இருவருமே துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் அவர்கள் வந்த காரில் அதற்கான அதிக அளவிலான தோட்டாக்கள் காணப்பட்டதாகவும் காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் டிவிட்டர் தகவல் ஒன்றில், அது தொடர்பிலான ஒரு குறிப்பு காணப்பட்டாலும் பின்னர் அது நீக்கப்பட்டுள்ளது.
அந்த ட்வீட்டை வெளியிட்ட அமைப்பு, இஸ்லாமியத் தீவிரவாத குழுவான இஸ்லாமிய அரசு அமைப்புக்கு தமது விசுவாசத்தையும் அதில் உறுதிப்படுத்தியிருந்தது.
மொஹம்மத் கலைக் கண்காட்சி என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வில் முகம்மது நபியின் கார்ட்டூனுக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர் பரிசளிக்கும் போட்டியும் இடம்பெற்றிருந்தது. சுமார் 200 பேர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வை American Freedom Defense Initiative அதாவது அமெரிக்க சுதந்திர பாதுகாப்பு முன்னெடுப்பு என்கிற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பை அமெரிக்காவின் சர்ச்சைக்குறிய வலைப்பதிவரும் செயற்பாட்டாளருமான பமேலா கெல்லர் நடத்திவந்தார்.
style=”color: #ff0000;”>
ஆனால் இந்த அமைப்பு முஸ்லீம் எதிர்ப்பு அமைப்பு என்று Southern Poverty Law Center என்கிற மனித உரிமைகள் அமைப்பு பட்டியலிட்டிருக்கிறது.
இந்த நிகழ்வு நடந்த Curtis Culwell Center என்கிற அரங்கம் ஜனவரி மாதம் சர்ச்சையில் சிக்கியிருந்தது. உள்ளூரில் இஸ்லாமிய மையம் கட்டுவதற்கான நிகழ்ச்சி ஒன்று இந்த அரங்கில் நடப்பதை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இதற்கு எதிரில் குழுமி ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.
நேற்றைய இந்த நிகழ்ச்சி குறித்து உள்ளூரில் பெரும் கவலைகள் இருந்தன என்று தெரிவித்திருக்கும் உள்ளூர் மேயர் அதாஸ், அதனாலேயே இதற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
ஆனால் இந்நிகழ்வுக்கு ஆபத்து இருப்பது குறித்து தங்களுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கார்லாண்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அமைப்பைத் தலைமையேற்று நடத்தும் 56 வயது பமெலா கெல்லர் 2005 ஆம் ஆண்டு முதலே இஸ்லாமை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தீவிரவாத தாக்குதலில் அழிக்கப்பட்ட உலக வர்த்தக மைய வளாகத்தை ஒட்டி முஸ்லீம் சமூக கூடம் ஒன்றை அமைக்கும் திட்டத்துக்கு 2010 ஆம் ஆண்டு இணையத்தில் எதிர்ப்பு தெரிவித்தபோது அவர் பரவலாக அறியப்பட்டார்.
இஸ்லாமை விமர்சித்து பேருந்துகளில் விளம்பரம் செய்ய இவர் முயன்ற செயல் சர்ச்சையை தோற்றுவித்தது.
இவர் தன்னை ஒரு கருத்துச் சுதந்திர போராளி என்று அழைத்துக் கொண்டாலும் இவர் ஒரு மாற்று மதங்களை சகித்துக்கொள்ளாதவர் என்று சாடுகிறார்கள்.
தான் முஸ்லீம்களுக்கு எதிரிஅல்ல என்று கூறியிருக்கும் அவர் தாம் ஜிகாதுக்கு மட்டுமே எதிரி என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேற்கத்திய சமூகங்களில் இஸ்லாம் குறித்து வெளிப்படையாக விமர்சித்துவரும் நெதெர்லாந்து அரசியல்வாதி கீர்த் வில்டர்ஸும் இதில் பிரதான உரை நிகழ்த்துனராக பங்கேற்றிருந்தார்.
நெதெர்லாந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கும் கீர்த் வில்ட்ர்ஸ், இது ஏற்க முடியாத கருத்துரிமை மீதான தாக்குதல் என்று தெரிவித்திருக்கிறார்.
தமது இறைத்தூதர் முகம்மது நபியை ஓவியமாக வரைவது பெரும்பாலான முஸ்லீம்களுக்கு பெரிதும் புண்படுத்தும் செய்கை.
2006 ஆம் ஆண்டு Jyllands-Posten என்கிற டேனிஷ் பத்திரிக்கை முகம்மப்து நபியை கேலிச்சித்திரமாக வரைந்தபோது பரவலான எதிர்ப்புகள் எழுந்தன.
அதேபோன்ற கார்டூன்களை பிரான்ஸின் சார்லீ ஹெப்தோ சஞ்சிகை வெளியிட்டபோது இந்த ஆண்டு ஜனவரிமாதம் அந்த நிறுவனத்தின் 12 பேர் கொல்லப்பட்டனர்.
பிப்ரவரி மாதம் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் கருத்துச் சுதந்திர ஆதரவு செயற்பாட்டாளர்களின் கூட்டம் ஒன்றில் துப்பாக்கிதாரிகள் சுட்டதில் திரைப்பட இயக்குநர் ஒருவர் கொல்லப்பட்டார்.