விழுப்புரத்தில் நடைபெற்ற உலக திருநங்கைகளின் கலைவிழாவில் பரதம், அம்மன் ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் திருநங்கைகள் ஈடுபட்டனர். மிஸ் கூவாகம் போட்டிகள் மே 4-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகின்றன.
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி விழுப்புரத்தில் ஆயிரக்காண திருநங்கைகள் குவிந்துள்ளனர். இவர்கள் விழுப்புரம் நகரின் பல்வேரு பகுதிகளில் ஒய்யார நடை நடந்து வருகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி மும்பை, கல்கத்தா, புதுதில்லி மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் இருந்து இவர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கான பல்வேறு நிகழ்வுகள் விழுப்புரத்தில் நடைபெற்று வருகின்றன.
இவ் விழாவில் திருநங்கைகள் கவர்ச்சி ஆட்டம், குத்தாட்டம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாரம்பரிய நடனங்களான பரதம், கரகாட்டம், அம்மன் ஆட்டம், மோகினி ஆட்டம், சிலம்பாட்டம், பறை அடித்து ஆடுதல் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இந் நிகழ்ச்சியை காண விழுப்புரம் ரயில்வே மைதானத்தில் நூற்றுக் கணக்கில் திருநங்கைகளும் குவிந்திருந்தனர். மாளவிகாவின் வரவேற்பு நடனம், சினேகிதி குழுவினரின் அம்மன் ஆட்டம், வேலூர் ஜோதி, ஜானகி ஆகியோரின் பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் அரவாணிகள் பங்கு பெறும் முக்கிய நிகழ்வான மிஸ் கூவாகம் 2015 நிகழ்வுகள் வரும் 4-ம் தேதி திங்கள்கிழமை மாலை நடைபெறுகின்றன. விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாலை இந் நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெறுகின்றன.
தமிழகத்தின் 33 மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் அமைப்பின் தலைவர்கள் இணைந்து இந் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கின்றனர். இந் நிகழ்ச்சிக்கான உதவிகளை விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.