ஓர் அழகிய விடியல். சரியாக ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை நேரம் அதிகாலை 3 மணியிருக்கும். பூண்டுலோயா டன்சினன் தோட்டம் அக்கரமலைப்பிரிவில் வசித்துவரும் பேச்சாயியின் வீட்டிலிருந்து எழுந்த “ஐயோ காப்பாத்துங்க”, காப்பாத்துங்க, என்ற அழுகுரல் அதிகாலைப்பொழுதின் அமைதியினைச் சிதைத்தது.
ஆழ்ந்த நித்திரையிலிருந்த தோட்டமக்கள் பலரும் திடுக்கிட்டு எழுந்தார்கள்.ஏன் இவர்கள் இப்படி சத்தமிடுகின்றார் கள்? அந்த வீட்டில் யாருக்கும் ஏதும் ஆபத்து நேர்ந்து விட்டதோ? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் பல தோட்ட மக்கள் மனதில் எழுந்தபோதும் ஒருவருக்கும் அந்த நேரத்தில் பேச்சாயியின் வீட்டிற்கு சென்று பார்க்கும் அளவுக்கு துணிவிருக்கவில்லை.
தொடர்ந்து பொழுது விடியும் வரை காத்திருந்து விடிந்தவுடன் பேச்சாயியின் வீட்டை நோக்கி தோட்ட மக்கள் படையெடுத்தார்கள்…….
அங்கு அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தது. இரத்த வெள்ளத்தில், இரவு நித்திரைக்கு செல்லும் போது அணிந்திருந்த ஆடைகளுடன்,
உடலெங்கும் வெட்டுக் காயங்களுடன் பேச்சாயியும் அவரது மகளான நித்தியாவும் சடலமாகக் கிடந்தார்கள்.
ஒரு நிமிடம் அதிர்ச்சியில் தோட்ட மக்கள் உறைந்து போனார்கள். அனைவர் மனதிலும் அச்சமும், கவலையும் மேலோங்க “இதனை யார் செய்திருப்பார்கள்” என்ற பதற்றத்துக்கு ஆளார்கள்.
எனவே “இனியும் தாமதிக்காமல் பொலிஸாருக்கு அறிவிப்போம் என்று தங்களுக்குள் தீர்மானம் எடுத்தார்கள்.
அதன்படி பூண்டுலோயா பொலிஸாருக்கு இச்சம்பவம் தொடர்பாக அறிவித்தனர். பூண்டுலோயா பொலிஸாரும் துரிதமாக தமது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
பூண்டுலோயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உப பொலிஸ் அதிகாரி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேர்ந்தனர்.
அதுமட்டுமின்றி நாவலப்பிட்டிய நீதிமன்ற நீதிவானான எல்.கே மஹிந்த சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் முகமாக சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டன.
இவ்வாறு பரிதாபகரமாக கொலை செய்யப்பட்ட பேச்சாயியினது குடும்ப பின்னணி,.தொடர்பாக நோக்குவோமானால்,
இயற்கை அன்னையின் வனப்பையெல்லாம் தன்னகத்தே கொண்ட மலையகத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு தோட்டம் தான் பூண்டுலோயா டன்சினன்.
அதுவும் அதிகாலையிலேயே பேச்சாயி எழுந்து கூடையை முதுகில் சுமந்தும், குடும்ப பாரத்தை மனதில் சுமந்து கொண்டவளாய், கால் கடுக்கப் பாடுபட்டு வேலை செய்வதே அவளது அன்றாட வழக்கம்
அந்த வகையில் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தின் அக்கரமலைப்பிரிவில் வசித்த பேச்சாயி ஏமாற்றங்களையும், அவமானங்களையும் மட்டுமே உறவாகக் கொண்டு வாழ்ந்து வந்தாள்.
இளம் வயதினிலேயே பேச்சாயி திருமண பந்தத்தில் இணைந்த போதும் ‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’ என்பது போல் திருமணமாகி ஒரு வருடத்திலேயே கர்ப்பவதியான பேச்சாயியினை தவிக்க விட்டு அவளுடைய கணவன் இன்னுமொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டான்.
அதன்பின் பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவள். கைக்குழந்தையுடன் நிர்க்கதியாய் நின்றாள். எனவே பெற்றோரின் சம்மதத்துடன் மறுவிவாகம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தாள்.
எனினும் அந்த வாழ்க்கையும் பேச்சாயிக்கு நிரந்தரமாக அமையவில்லை. இரண்டாவது கணவனும் இடை நடுவே அவளை விட்டு நிரந்தரமாக இவ்வுலகிலிருந்து பிரிந்து சென்றான்.
அதன்பின் ஆயிரம் உறவுகள் அருகிலிருந்து ஆறுதல் சொல்லியும் அவள் சோகம் தீரவில்லை. அவளது எதிர்பார்ப்புகள் யாவுமே கானல் நீராய் மாறியது.
எனினும் அவளுக்குள் ஒரு அசையா நம்பிக்கை. இரு தடவைகள் திருமணம் செய்ய நேர்ந்ததன் விளைவாக பிறந்த பிள்ளைகளாக இருந்த போதும் அவர்கள் இருவருக்கும் நன்கு கல்வி போதித்து சமூகத்தில் நல்ல நிலைக்கு அவர்களை கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் உறுதியாகவிருந்தாள்.
முதல் கணவருக்கு பிறந்த ஆண் குழந்தை மனோஜ்ஜையும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.), இரண்டாவது கணவருக்கு பிறந்த பெண் குழந்தை நித்திய கல்யாணியையும் வளர்த்து ஆளாக்குவ.தற்கு ஒரு தனி மனுஷியாய் பெரும் பாடுபட்டாள்.
அதிகாலையிலேயே எழுந்து வீட்டு வேலைகளை செய்து, பிள்ளைகளுக்கு தேவையான அனைத்தையும் செய்து வைத்துவிட்டு மலைக்கு வேலைக்கு சென்று கொழுந்து பறித்து, மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து மறுபடியும் வீட்டு வேலைகளை செய்வதுமாய் ஒரு இயந்திரத்தை போல் உழைத்தாள்.
எனினும் நிலைமை தலைகீழாக மாறியது. பிள்ளைகள் இருவரும் பாடசாலை கல்வியையும் ஒழுங்காக பூர்த்தி செய்யாது பாடாசாலையிலிருந்து இடையிலேயே விலகினார்கள்.
மகள் நித்தியா தனது விருப்பத்திற்கு திருமணம் செய்துகொண்டு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்று மீண்டும் இரு பிள்ளைகளுடன் தாயிடமே தஞ்சமடைந்தாள்.
மகன் மனோஜ் நாட்கூலி வேலைக்கு சென்றான். எனினும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சாராய கடைக்காரர்களின் வங்கி கணக்குகளை நிரப்பவே செலவழித்தான்.
கசிப்பு, சாராயம் அருந்தி ஒருவன் ஊருக்குள் வந்தால் அவன் தான் சண்டியன் என்று அப்பாவித்தனமாக நம்பும் மக்களிடம் தன் போலி வீரத்தைக் காட்டினான்.
அதுமட்டுமின்றி, வீதியில் செல்லும் பெண்களை கேலி செய்வது என்று அவனின் அட்டுழியங்கள் வரையறைகள் இன்றி தொடர்ந்தன.
பல நேரங்களில் குடும்பப் பொறுப்புகளை தட்டிக் கழித்து தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் சுய நல எண்ணம் கொண்டவனாக இருந்தான்.
எனவே தான் தனது தாயையும் சகோதரியையும் பேணி பாதுகாக்கும் கடமைகளை மறந்து இளம் வயதினிலேயே தாய்க்கு தெரியாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து வீட்டுக்கு கூட்டி வந்தான்.
இதனால் பேச்சாயி தன் வாழ்க்கை மீது வைத்திருந்த சிறிதளவு நம்பிக்கையையும் இழந்தாள். வயதான காலத்திலும் மலைக்கு வேலைக்கு சென்று குடும்பத்தைக் கொண்டு சென்றாள்.
அதுமட்டுமின்றி எந்த மகன் தன் மகளை எதிர்காலத்தில் தனது ஸ்தானத்திலிருந்து பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையிலிருந்தாளோ அந்த நம்பிக்கையும் பொய்யாகியது.
மனோஜுக்கும் நித்தியகல்யாணிக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலைகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.
இருவரையும் சமாதானப்படுத்த பேச்சாயி முற்படுவதால் பலமுறை பேச்சாயிக்கும் மனோஜுக்கும் இடையிலும் பிரச்சினைகள் எழுந்தன.
இவ்வாறு முரண்பாடுகள் தொடர்ந்த நிலையில் தான் திங்கட்கிழமை தனது வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நித்திரைக்கு சென்ற நித்தியாவும் பேச்சாயியும் அதிகாலை 3 மணியளவில் மனோஜின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள்.
19ஆம் திகதி மனோஜின் மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்ற நிலையில் இரவு அதிக குடிபோதையில் வந்த மனோஜ் தனது போலியான சண்டித்தனத்தினால் நித்தியாவையும், தாய் பேச்சாயியையும் தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளான்.
எனினும் அவற்றை சிறிதும் காதில் வாங்காது நித்தியாவும், பேச்சாயியும் நித்திரைக்கு சென்றுள்ளார்கள். எனினும் மனோஜ் மட்டும் இரவு முழுவதும் தனது இமைகளை சற்றும் மூடாமல் அவர்கள் இருவரையும் கொலை செய்ய வேண்டும் என்ற வெறியுடன் காத்திருந்தான்.
அதன்படி ஆழ்ந்த நித்திரையிலிருந்த இருவரையும் அதிகாலையில் அவர்கள் இருக்கும் அறைக்கு சென்று கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.
அதன்பின்னர் ஊரார் கொடுத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பூண்டுலோயா பொலிஸாரின் தொடர் முயற்சியினால் சந்தேக நபரான மனோஜ் தலவாக்கலை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது பொலிஸாரிடம் கையும் களவுமாக அகப்பட்டான்.
அதுமட்டுமின்றி சம்பவத்தின் போது அணிந்திருந்த ஆடையையும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் கைப்பற்றினர்.
தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபரான மனோஜிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் “தனது தாயையும், சகோதரியையும் நான் தான் கொலை செய்தேன்” என்று தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட போதும் கொலைக்கான சரியான காரணத்தை இதுவரை விபரமாக வெளியிடவில்லை எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டன்சினன் தோட்டம் அக்கரமலைப்பிரிவைச் சேர்ந்த நபரொருவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் “இவர்கள் வீட்டில் தினமும் சண்டையாகத் தான் இருக்கும்.
அன்று அதிகாலையும் வழமையாக நடைபெறும் சண்டையாகத் தான் இருக்கும் என்று நாங்கள் யாரும் செல்லவில்லை.
எனினும் இவ்வாறான ஒரு கொடூர சம்பவம் நடக்கும் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.’ என்று தெரிவித்தார்.
எனவே பேச்சாயியின் குடும்ப பின்னணி, வாழ்க்கை முறை என்பனவற்றை வைத்துப் பார்க்கும் போது கொலைக்கு பல்வேறு காரணங்கள் ஏதுவாக அமைந்திருக்கின்றன என்பதை ஊகிக்கக் கூடியதாகவிருக்கின்றது.
எது எவ்வாறாயினும் மலையகத்தில் கொட்டும் மழையிலும், வேகாத வெயிலி லும் உடலை வருத்தி வேலை செய்யும் தாய்மார்கள் பலரின் எதிர்பார்ப்பு தான் படும் கஷ்டத்தை தனது பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாது என்பதேயாகும்..
அப்படியிருக்கையில் பெற்ற தாயை மகனே கொலை செய்யும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறுவது ‘பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்பதை நிரூபித்துக்கொண்டே செல்கின்றன.