யாழ்ப்பாணத்தில் எம்.கே.ஓ. என்ற பெயரில் ஐ.எஸ். போன்ற தீவிரவாத கிளர்ச்சி அமைப்பொன்று உருவாகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்தியகிழக்கு நாடுகளில் கடும் தண்டனைகளின் மூலம் புகழ்பெற்ற ஐ.எஸ். இயக்கத்தின் பாணியிலான இயக்கமொன்று யாழ்ப்பாணத்தில் உருவாகிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்து, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ரௌடித்தனம், புகைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் செய்யும் வாலிபர்கள் மற்றும் குட்டையான கவர்ச்சியான ஆடைகள் அணியும் பெண்களின் கைகளை வெட்டவுள்ளதாக எச்சரிக்கைவிட்டு அனாமதேய சுவரொட்டிகள் குடாநாட்டின் பல இடங்களிலும் நேற்று ஒட்டப்பட்டிருந்தது.
யாழ்க்குடாவில் ரௌடித்தனங்கள் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய குற்றங்களிற்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாதென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர், யுவதிகள் எல்லைமீறி சென்றால் எப்படியான தண்டனைகள் வழங்கப்படும் என அதில் விபரிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் பொதுமக்களிற்கு இடையூறு விளைவித்தல், வாள்வெட்டில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களிற்கு கை துண்டிக்கப்படும் என்றும் மாலை 6 மணிக்கு பின்னர் சந்திகளில் மூன்றுபேருக்கு மேல் கூடி நின்றால், பொது இடத்தில் கும்பலாக சிகரெட் புகைத்தால் தண்டனை வழங்கப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெண்களிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரைகுறை ஆடையணிந்து சென்றால் அவர்களிற்கும் தண்டனை வழங்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது எனவும் அச்செய்தி தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். அமைப்பு இஸ்லாத்தின் பெயரில் இயங்கும் சர்ச்சைக்குரிய தீவிரப் போக்குள்ள ஓர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.