வவுனியாவில் 10 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 18 வயது இளைஞர் ஒருவரை இன்று திங்கட்கிழமை மாலை தாம் கைது செய்தனர் என வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் கடந்த 9 ஆம் திகதி சந்திரசேகரன் சஞ்சய் என்ற 10 வயது சிறுவன் பகல் வேளையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டின் பின்புறமாகவிருந்து சடலமாக மீட்கப்பட்டான்.
இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சண் அபேயவர்த்தன தலைமையிலான 5 பேர் கொண்ட பொலிஸ் அணி பல்வேறு கோணங்களில் பலரிடமும் வாக்கு மூலங்களை பெற்று விசாரணைகளை நடத்தி வந்தது.
இந் நிலையில் இக் கொலையுடன் தொடர்புடையவர் என கொல்லப்பட்ட சிறுவனின் உறவினரான 18 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த இளைஞர் சிறுவனின் வீட்டின் அருகிலேயே வசிக்கிறார்.
சிறுவனின் வீட்டில் இருந்த உண்டியலில் பணத்தை திருடச் சென்ற சமயம் அதனை கண்ட சிறுவன் வீட்டாரிடம் சொல்லப் போவதாக கூறியதையடுத்து அருகில் இருந்த கத்தியை எடுத்து சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக இளைஞன் வாக்குமூலம் அளித்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மரணமடைந்த சிறுவனின் தாய்க்கும் இக் கொலையுடன் தொடர்பு இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
ஆனால் இக் கொலைக்கும் அச் சிறுவனின் தாய்க்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று (5.5.2015) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.