விழுப்புரம்: திருநங்கைகளின் திருவிழாவான கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட மிஸ் கூவாகம் போட்டியில், மதுரையை சேர்ந்த பிரவீனா என்ற திருநங்கை முதல் இடத்தை பிடித்து மிஸ் கூவாகமாகமானார்.
திருநங்கைகளின் குலதெய்வமாக போற்றப்படும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.
தங்களின் சோகங்களையும், வருத்தங்களையும் மறந்து ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் திரண்டு ஆராவாரத்துடன் இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
இந்த விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியான ‘மிஸ் கூவாகம்’ நடை பெறுவது வழக்கம்.
இந்த கலர்புல்லான மிஸ் கூவாகம் போட்டியில் தாங்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக, கடல் கடந்து வந்திருந்த திருநங்கைள் சாரை சாரையாக பூக்கள், கிலோ கணக்கில் பவுடர்கள் மற்றும் அழகு பொருட்களை வாங்க, கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே ஷாப்பிங் செய்வதில் மூழ்கினர்.
தாய்லாந்து முதல் மதுரை வரை பல ஊர்களில் இருந்து வந்திறங்கி இருந்த புடவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். 63 பேர் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோவில், திருநங்கைகள் ரேம்ப்வாக், கேட்வாக் என ஒய்யார நடை நடந்துவந்து அனைவரையும் அசத்தினர்.
ஃபேஷன் ஷோவில், திருநங்கைகளின் அழகுடன் அவர்களின் நடை, உடை, அறிவு திறனுக்கும் சமமான மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
முதல் சுற்றில் 10 பேர் தேர்வான நிலையில், அதிலிருந்து மூன்று பேரை தேர்வு செய்ய வந்திருந்த நடுவர்கள் நடிகை ஷகிலாவும், அனுராதாவும் கடுமையாக தடுமாறும் அளவிற்கு திருநங்கைகள் திறமையை வெளிக்காட்டினர்கள்.
இறுதியில், மதுரையை சேர்ந்த ஹாரினி முன்றாம் இடத்தையும், தூத்துகுடியை சேர்ந்த சசி இரண்டாம் இடத்தையும் பெற்ற நிலையில், மதுரையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரவீனா முதல் இடத்தை பெற்று மிஸ் கூவாகம் பட்டத்தை தட்டி சென்றார்.
”நாங்களும் பெண்கள்தான், எங்களை வெறுப்புடன் பார்க்காதீர்கள். பெண்ணின் ஆன்மா தவறான உடலின் (ஆண்) வாழும் வெளிப்பாடுதான் நாங்கள். நிறைய திருநங்கைகள் நன்றாக படித்திருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு வேலை கொடுங்கள்.
எங்களுக்கு யாரும் வேலை தராமல், பிச்சை எடுப்பதை மட்டும் கேவலமாக பேசாதீர்கள். ஒருசில திருநங்கைகள் தப்பு செய்வதால் எல்லாரும் தப்பானவர்கள் இல்லை” என்று கொதித்தார் முதலிடம் பிடித்த பிரவீனா.
வெற்றி பெற்றவர்களுக்கு கிரீடமும் பரிசுகளையும் வழங்கிய நடிகை ஷகிலா பேசும்போது, ”திருநங்கைகளிடம் உள்ள நல்ல மனது வேறு யாருக்கும் இருக்காது.
நாட்டில் ஜாதி, மத கலவரம் நடந்து கொண்டிருக்கும்போது, அதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல் திருநங்கைகள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
ஒரு முஸ்லீம் திருநங்கை, இந்து திருநங்கையை மகளாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேறு யாருக்கு இருக்கும்.
எனக்கு அம்மா, அப்பா கிடையாது, தம்பியும் எங்கயோ இருக்கான். இப்படிப்பட்ட எனக்கு, 5 வருடமாக தங்கம் என்கிற திருநங்கைதான் எல்லாமுமாக இருக்காங்க.
என்கிட்ட பேசவே பலர் தயங்கும் போது, தங்கம் தான் என் மேல் பாசமா, அக்கறையா இருக்காங்க. சமூகம், உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கவலைப்படாதீர்கள். நான் உங்களுக்கு அம்மாவா, அக்காவா, தங்கச்சியா இருப்பேன்” என்று நெகிழ்ந்தார்.
ஆ.நந்தகுமார்