பிரித்தானியாவில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட நான்கு இலங்கை வம்சாவளியினரும் போட்டியிடுவதால், பரபரப்பு அதிகமாகியுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், லண்டன் ஹரோ ஈஸ்ட் தொகுதியில் ஈழத்தமிழ் வம்சாவளியினரான, உமா குமரன், தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானப் பட்டதாரியான இவர், லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பேப்பர் என்ற தமிழ் இதழின், ஊடகவியலாளருமாவார்.

ஆளும்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் ஹரோ ஈஸ்ட் தொகுதியின் தற்போதைய உறுப்பினரான பொப் பிளக்மனை எதிர்த்து இவர் போட்டியிடுகிறார்.

இங்கு இவர்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுவதாக, லண்டன் ஈவினிங் ஸ்ரான்டட் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்கள் யோகலிங்கம் மற்றும் உமாகுமரன்
அதேவேளை, ரூசிலிப், நோர்த்வூட், மற்றும் பின்னர் தொகுதியில், யோகி எனப்படும், 47 வயதான, சொக்கலிங்கம் யோகலிங்கம், தேசிய லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

மேலும், வடகிழக்கு ஹம்ப்செயர் தொகுதியில், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் ரணில் ஜெயவர்த்தன என்ற இலங்கையர் போட்டியிடுகிறார்.

கடந்தமுறை இந்த தொகுதியில், கன்சர்வேட்டிவ் கட்சி அதிகளவு வாக்குகளை பெற்றிருந்த நிலையில், இவருக்கு இம்முறை வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

அத்துடன் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில், சமில பெர்னான்டோ என்ற இளம் சட்டவாளர், கேம்பிரிஜ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான பிரதமர் டேவிட் கமரொன், தனது தேர்தல் அறிக்கையில், சிறிலங்காவில் தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பதாகவும், அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply