சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாளை மறுநாள் வரை விளக்கமறியலில் வைக்க, கடுவெல நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக, கடந்த ஏப்ரல் 22ம் நாள், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்சவை, மே 5 வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பசில் ராஜபக்ச பின்னர், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியில், அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது விளக்கமறியல் இன்றுடன் முடிவடையும் நிலையில், அங்கிருந்து இன்று காலையில் கடுவெல நீதிமன்றத்துக்கு நோயாளர்காவு வண்டியில், கொண்டு வரப்பட்டார்.
நோயாளர் காவு வண்டிக்குள் பசிலை பார்வையிட்டு விளக்கமறியலை நீடித்து விட்டு வெளியேறும் நீதிவான்.
எனினும், பசில் ராஜபக்சவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் நோயாளர் காவு வண்டியில் இருந்து இறக்கப்படவில்லை.
கடுவெல நீதிவான், நோயாளர் காவு வண்டிக்குள் சென்று, அவரைப் பார்வையிட்டு எதிர்வரும் மே 7ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்தும் பசில் ராஜபக்சவை, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாறு நீதிவானிடம், சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை நிராகரித்த நீதிவான், வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
06-05-2015
இதனிடையே, இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சரை நாளைய தினம் குருநாகல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த வட மேல் மாகாணசபை தேர்தலின் போது கூட்டுறவு மொத்தவிற்பனை கூட்டுத்தாபனத்திடமிருந்து சுமார் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களை பெற்றுக் கொண்டு பணத்தை தருவதைத் தவிர்த்து மோசடி
செய்ததாக குற்றச்சாட்டின் கீழ் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப் பட்டார்.