வலி.மேற்கு பிரதேசத்திலுள்ள பிரான்பற்று, காளி அம்மன் ஆலய வருடாந்த வேள்வி இன்று காலை நடைபெற்றபோது 100க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.
வேள்விகளும், பலியிடல்களும் மதத்தின் பெயரால் இன்று நிகழ்த்தப்படுகின்றது. இது காலாகாலமாக வெட்டிவீழ்த்தப்படும் உயிர்கள் தான்.
ஆனால் இவற்றை இன்று கைவிடுவதற்கு தமிழினம் தயாராக இல்லை என்பதை நாம் அவதானிக்க முடிகின்றது.
இன்றைய தினமும் நூற்றுக்கணக்கான கடா ஆடுகள் வெட்டி மண்ணில் சாய்க்கப்பட்டள்ளன.
இந்நிலையில் ஒரே வெட்டில் இரண்டு துண்டாய் தலைவேறு முண்டம் வேறாய் துடிதுடித்து கிடந்த ஒரு கடா ஆடு தன் வாழ்க்கையையும் துன்பத்தினையும் அந்த ஆலய சந்நிதானத்தில் அதாவது அந்தக்கடாவின் பலிபீடத்தில் கிடந்தவாறு தன் ஆற்றாமையை சொல்லி புலம்புகின்றது.
அவ்வளவு சனக்கூட்டத்திற்கு மத்தியிலும் அதன் புலம்பல்கள் மட்டும் என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தன.
எனதருமை அன்புத்த தமிழா! உன் நம்பிக்கைகள் கண்டு எமது இனம் இன்று வெட்கித்தலைகுனிகின்றது.
மன்னித்துக்கொள்ளுங்கள். சாப்பிட இலை போட்டு, தாகத்திற்கு தண்ணீர், கஞ்சி வைத்து, மழையில் நனையாமல் இருக்க கொட்டகை போட்டு ராஜ மரியாதையோடு வளர்த்த உங்களைப்பார்த்து நாம் வெட்கித் தலைகுணிகின்றோம் என சொன்னதற்காக.
நாங்கள் நன்றி மறப்பவர்கள் அல்ல. அதற்காக உங்கள் மூட நம்பிக்கைகளைப்பார்த்து சும்மாயிருக்கவும் எங்களால் முடியவில்லை.
நீங்கள் செய்த உதவிக்காக உங்களுக்கு நாங்கள் செஞ்சோற்றுக் கடன் செய்ய வேண்டிய கடமையிருக்கிறது. அது தான் இது.
அன்பான மனிதா..! விலங்குகள் ஒன்றை ஒன்று அடித்து அதை புசித்து உயிர் வாழும் இயல்பு கொண்டன. அதாவது இன்னொன்றில் இன்னொரு உயிர் தங்கியிருக்கின்றது. அந்த வகையில் ஒன்று இல்லையாயின் இன்னொன்று இல்லை.
ஆனால் மனிதன் மட்டும் தனக்குள் அடித்துக்கொண்டும், கொன்று கொண்டும் இருப்பது உலக வேதனை.
இது உங்கள் பிரச்சினை. அதில் நாங்கள் தலையிடவும் இல்லை. ஆனால் பேசவே முடியாத விலங்குகளை இன்று இத்தனை கொடூரத்தனமாக கொன்று குவித்திருப்பதை நினைக்கும் போது நீங்கள் இன்னமும் நாகரிமடையவில்லை அல்லது முழுமை பெறவில்லையா என்று எண்ணத்தோன்றுகின்றது.
தமிழனே உலகின் மூத்த குடியென்று என்றுமே பெருமை பேசிக்கொள்ளும் நீ உலகின் மற்றைய இனங்களுக்கு எடுத்துக்காட்டாகவல்லா இருக்க வேண்டும்.
ஆனால் நீ இன்னமும் மூட நம்பிக்கையில் இருப்பதை நினைத்து ஐந்தறிவு படைத்த ஆடுகள் நாங்கள் வெட்கப்படுகின்றோம்.
மிருகங்கள் வதைக்கப்படுவது சட்டப்படி குற்றம் என்று அரசாங்கங்கள் இன்று சட்டங்கள் இயற்றி மிருகங்களை பாதுகாத்துவருகின்றன. ஆனால் தமிழன் மட்டும் ஆலயங்களில் மிருகங்களை வெட்டி வீழ்த்தி நரபலி வேட்டை ஆடுகின்றான்.
இது தமிழனுக்கு நியாயமா? இப்படி எங்களை நீங்கள் வெட்டி வீழ்த்திய போது உங்களுக்கு சிங்களவன் அடித்தவைகள் கூடவா ஞாபகத்திற்கு வரவில்லை.
ஓட ஓட விரட்டி தமிழர்களை சிங்களவர்கள் வெட்டி வீழ்த்திய போதும், விமானங்களைக்கொண்டு குண்டு மழை பொழிந்த போதும் எத்தனையோ உயிர்கள் துடிதுடித்து இறந்து போயின.
இந்து ஆலயங்கள், தேவாலயங்கள்,பாடசாலைகள் என அத்தனை இடங்களிலும் தமிழன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். இதை தமிழனுக்கு சொல்லித்தரன் தேரிய வேண்டும் என்றில்லை.
இவற்றையெல்லாம் பார்த்து, அனுபவித்த தமிழன் தான் இன்று செல்லமாக ஆசையாக வளர்த்த ஆடுகளை நேர்த்திக்கடன் என்ற பெயரில் வெட்டி வீழ்த்துகின்றான்.
ம்ம். உங்களைக்கொன்ற சிங்களவனை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும், தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் உலக பொதுமன்றமாகிய ஐக்கிய நாடுகள் சபையிடம் மன்றாடுகின்றீர்களே எங்களையும் நீங்கள் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கும் போது உங்களை எந்த நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்த? அதுவும் இறைவன் சந்நிதியில்.
எஸ்.பி.தாஸ்
நேர்த்திக்கடன், வேள்வி என்ற பெயரில் வாயில்லா ஜீவன்களை பலி கொடுத்து தாங்கள் புசிப்பதற்காக நடத்தப்படும் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களை நிறுத்துவதற்கு வடமாகாண முதலமைச்சா நடவடிக்கை எடுக்கவேண்டும்.