லண்டன்: இங்கிலாந்தில் கடந்த 7–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர் வேடிவ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 191 பெண்கள் வெற்றி பெற்று எம்.பி. ஆகி உள்ளனர். இது இங்கிலாந்து பாராளுமன்ற எம்.பி.க்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 30 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 68 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் இக்கட்சி சார்பில் 47 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.

எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சியில் கடந்த தேர்தலில் 87 பேர் வென்று இருந்தனர். தற்போது 99 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

அனைத்துக்கும் மேலாக ஸ்காட்லாந்து தேசிய கட்சியில்தான் அதிக பெண் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் இக்கட்சியில் ஒரே ஒரு பெண் எம்.பி. மட்டுமே இருந்தார்.

தற்போது அக்கட்சி சார்பில் 20 பேர் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்கின்றனர். இவர்கள் தவிர லிபரல் ஜனநாயக கட்சி சார்பில் 7 பெண்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

 

Share.
Leave A Reply