லக்ஸம்பேர்க் நாட்டின் பிரதமர் ஷேவியர் பெட்டெல், ஒருபாலினத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
பிரதமர் ஷேவியர் பெட்டெல், தனது துணைவரான கௌதியர் டெஸ்டினே என்பவரை திருமணம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 வயதான ஷேவியர் பெட்டெல் ஒரு பாலின சேர்க்கையாளர் ஆவார். 2013 ஆம் ஆண்டு முதல் அவர் லக்ஸம்பேர்க் பிரதமராக பதவி வகிக்கிறார்.
லக்ஸம்பேர்க்கில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பாலினத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பிரதமர் ஷேவியர் பெட்டல் தனது சொந்த திருமணத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளவுள்ளார்.
லக்ஸம்பேர்க்கின் பிரதிப் பிரதமரான எட்டைன் ஷிண்டரும் ஒருபாலின சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், ஒரு பாலின சேர்க்கையாளர்களை பிரதமராகவும் பிரதி பிரதமராகவும் கொண்ட உலகின் ஒரேயொரு நாடாக லக்ஸம்பேர்க் உள்ளது.
ஐரோப்பாவின் மிகசிறிய நாடுகளில் ஒன்றான லக்ஸம்பேர்க் தரையால் சூழப்பட்ட நாடாகும். ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் ஆகியவற்றை எல்லையாகக் கொண்டுள்ளது.
2586 சதுரகிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட லக்ஸம் பேர்க்கில் சுமார் 560,000 மக்கள் வசிக்கின்றனர்.
ஆனால், உலகின் மிக செல்வந்த நாடுகளில் ஒன்றாக லக்ஸம்பேர்க் விளங்குகிறது.
சுமார் 93,000 டொலர் தலா வருமானத்தைக் கொண்ட லக்ஸம்பேர்க் அதிக தலா வருமானத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் கத்தாருக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
லக்ஸம்பேர்க் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷேவியர் பெட்டில், லக்ஸம்பேர்க் நாட்டின் தலைநகரான லக்ஸம்பேர்க் சிட்டியின் மேயராக 2011 முதல் 2013 டிசெம்பர் வரை பதவி வகித்தார்.
அதன்பின் லக்ஸம்பேர்க் பிரதமராக அவர் தெரிவானார். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் கௌதியர் டெஸ்டினேவுடன் இணைந்து வாழ்கிறார்.
40 வயதான கௌதியர் டெஸ்டினே ஒரு கட்டடக்கலைஞர் ஆவார். கௌதியரை தான் திருமணம் செய்யப்போவதாக கடந்த ஓகஸ்ட் மாதம் பிரதமர் ஷேவியர் பெட்டெல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் ஷேவியருக்கும் கௌதியருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட நிகழ்வாக இத்திருமண வைபவத்தை நடத்துவதற்கு லக்ஸம்பேர்க் பிரதமர் ஷேவியர் பெட்டெல் திட்டமிட்டுள்ளதாக வும், இவ் வைபவத்தின் புகைப்படங்களை பிரத்தியேகமாக வெளியிடுவதற்கான உரிமையைப் பெறுவதற்கு சஞ்சிகையொன்று முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், ஜேர்மனியின் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கெலுடன் லக்ஸம்பேர்க் பிரதமர் ஷேவியர் பெட்டெல்