புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வின்பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்களும் விரிவுரையாளர்களும் மழைக்கு மத்தியிலும் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
மாணவியின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சி மாணவிகள் ஆர்ப்பாட்டம்
பூங்குடுதீவு மாணவி கொலை: பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்
15-05-2015
புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்த கொலையாளிகளுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார்.
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட கண்டன போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது. இந்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இராசகுமாரன் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
முன்னர் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி இராணுவ முகாமுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன.
இது முற்றுமுழுதாக நிறுத்தப்பட வேண்டும்;. இதற்காக ஜனநாயக ரீதியில் போராடுவோம். கொலை, கொள்ளை என்பன அதிகரித்துள்ளன.
இவை திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது. அரசு மாறினாலும் துன்பங்கள் மாறவில்லை. நிம்மதியான வாழ்வு எமக்குக் கிடைக்கவில்லை.
பொலிஸார் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களும் இதற்கெல்லாம் உடந்தையாக இருக்கின்றார்கள் என சந்தேகம் எமக்கு ஏற்படும்.
இவ்வாறான குற்றங்கள் செய்தவர்களுக்கு 2005 ஆம் ஆண்டு முன்னர் எவ்வாறான தண்டனை கிடைத்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். சில தண்டனைகள் கட்டாயம் தேவையானது.
திருத்த முடியாதவர்களும் எங்கள் சமூகத்தில் இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் அந்தத் தண்டனைகள் வேண்டும். அதனை யாரும் குறைசொல்ல முடியாது.
எமது சமூகமும் விழித்தெழ வேண்டும். ஒரு தரப்பினருக்கு பிரச்சினை என்றுவிட்டு மற்றைய தரப்பினர் கண்மூடி இருக்கக்கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். பொலிஸார் பொதுமக்களின் நலனில் பொதுமக்களுடன் இணைந்து செயற்படவேண்டும்’ என்றார்.