துபாய்: விமானத்தில் மனிதர்கள் பயணிப்பது சாதாரணமான விஷயம். ஆனால் மனிதனே விமானமாக மாறி பறந்தால்… மயிர்க்கூச்செறிய வைக்கும் அந்த வித்தையை சில நாட்களுக்கு முன்பு துபாயில் இரண்டு பேர் செய்து காட்டி, எதிர்காலம் குறித்த கற்பனைக் குதிரையை தட்டி விட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பைலட் யுவஸ் ரோஸி என்பவரும், இன்னொரு ஸ்கை டைவரான வின்ஸ் ரெப்பட்டும் இணைந்துதான் இந்த ஆச்சரியத்தை நிகழ்த்தியுள்ளனர்.
எதிர்காலத்தில் மனிதர்களே விமானங்களாக மாறி பறக்கப் போகிறார்கள் என்பதற்குக் கட்டியம் கூறும் வகையில் இது அமைந்துள்ளது. நமது எதிர்கால உலகம் எப்படியெல்லாம் இருக்கும் என்ற கற்பனையும் மேலும் விஸ்தாரமாகியுள்ளது.
ஸ்கை டைவிங்கில் புது பரிமாணம் இதுவரை ஸ்கை டைவிங் செய்து வந்தவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது யுவஸ் ரோஸின் “ஜெட் பேக்” டைவிங். இவர் தனது உடலில் குட்டி ஜெட் என்ஜினைப் பொருத்திக் கொண்டு பறக்கிறார்.
சமீபத்தில் இவர் துபாயில் செய்து காட்டிய வான வேடிக்கையை உலகம் முழுக்க மக்கள் வீடியோவில் பார்த்து மிரண்டு போயுள்ளனர். விமானங்களைப் போலவே படு வேகத்தில் இவர்கள் துபாய் வான்வெளியை பறந்து கடந்தது கீழே இருந்து பார்த்தவர்களையும் அரள வைத்தது.
இந்த வகை ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட ஸ்கை டைவிங்கை கீழேயிருந்து செய்ய முடியாது. விமானம் அல்லது ஹெலிகாப்டரில் மேலே போய் அங்கிருந்து குதித்துதான் இந்த ஜெட் என்ஜினை இயக்கி இஷ்டத்திற்குப் பறக்க முடியும்.
கிட்டத்தட்ட ஹெலிகாப்டர், விமானங்களைப் போலவே நீண்ட தூரத்திற்கு, நல்ல வேகத்தில் இதில் போக முடியுமாம். மிகவும் திரி்ல்லான அனுபவமாக இது இருக்கும் என்று கூறுகிறார் ரோஸி. மேலும் சமீபத்தில் இதே துபாயில் சாகச விமானம் ஒன்றோடு இணைந்து பார்மேஷனிலும் ஈடுபட்டு சாதனை படைத்திருந்தார் ரோஸி என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் சேர்ந்து மிரட்டினர்: தற்போதைய ஜெட் பேக் ஸ்கை டைவிங்கில் ரோஸியுடன், ஸ்கை டைவர் வின்ஸ் ரெப்பட்டும் இணைந்து துபாய் வான்வெளியை மிரள வைத்ததை பலரும் பார்த்து எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற ஆச்சரியக் கற்பனையில் இறங்கினர்.
ரோஸி, பிரெஞ்சு விமானப்படையில் போர் விமானியாக இருந்தவர். உலகிலேயே ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டு மேலே பறந்த முதல் மனிதர் இவர்தான். அந்த வகையில் இவர் செய்தது உலக சாதனை.
இதற்கு முன்பு ஆங்கிலக் கால்வாய், கிரான்ட் கன்யான் மெளன்ட் புஜி ஆகியவற்றின் மீது ஜெட் என்ஜினைப் பொருத்திக் கொண்டு பறந்துள்ளார் ரோஸி. மேலும் ஆல்ப்ஸ் மலைக்கு மேலே இரண்டு போர் விமானங்களைத் துரத்திப் பறந்தும் உலகை அதிர வைத்தவர் இந்த அசகாய ரோஸி. சுருங்கச் சொல்லனும்னா இவர் மனிதரே இல்லை!