திருமலை: திருப்பதியில் அழுது அடம் பிடித்த குழந்தையை அடித்தே கொன்ற கல்நெஞ்சம் படைத்த கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி போரூர் வித்யா நகரை சேர்ந்த மோகன் குமார். இவருக்கும் கரிஷ்மா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பிரபாஸ் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது.
துணிக்கடை ஊழியராக மோகனகுமார், தனது மனைவி, தாய் மாதவியுடன் திருப்பதி வித்யா நகர் காலனி பகுதியில் வசித்து வருகிறார். மோகனகுமாருக்கும், கரிஷ்மாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம்.
இந்நிலையில், நேற்று மாலை கரிஷ்மாவுக்கும் மோகனகுமாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. தகராறு முற்றிய நிலையில் அங்கிருந்து புறப்பட்டு மோகனகுமார் வேலைக்கு சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த மோகனகுமாரின் தாய் மாதவியும் வெளியே சென்றுவிட்டார். அப்போது, வீட்டில் குழந்தையுடன் கரிஷ்மா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.
மேலும், குழந்தை அழுது கொண்டே இருந்ததால் அதை தட்டிக் கொடுத்து அழுகையை நிறுத்த கரிஷ்மா முயற்சித்து உள்ளார்.
ஆனால், குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. ஏற்கனவே கணவரிடம் சண்டையிட்ட ஆத்திரத்தில் இருந்த கரிஷ்மாவுக்கு குழந்தை அழுது அடம் பிடித்தது மேலும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதை தொடர்ந்து, அங்கு கிடந்த ஒரு சிறிய குச்சியை எடுத்த கரிஷ்மா, குழந்தையை அடி அடி என்று அடித்துள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் குழந்தை மேலும் வீரிட்டு அழுதுள்ளது.
இதில், கோபத்தின் உச்சிக்கே சென்ற கரிஷ்மா பெற்ற மகன் என்றும் பாராமல் குழந்தையை தூக்கி தரையில் அடித்திருக்கிறார்.
சிறிது நேரத்தில் வாயில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறது.
ஆத்திரத்தில் செய்த தவறை நினைத்து கரிஷ்மா விழித்து கொண்டிருந்தபோது, வெளியே சென்றிருந்த மோகனகுமாரின் தாய் மாதவி வீடு திரும்பி இருக்கிறார்.
அப்போது, தனது பேரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து பதறியபடி என்ன நடந்தது என்று கரிஷ்மாவிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு கரிஷ்மா, குழந்தை தொட்டிலில் இருந்து விழுந்து இறந்து விட்டது என்று பொய் சொல்லி கதறி அழுதிருக்கிறார்.
அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி கரிஷ்மாவிடம் குழந்தை இறந்தது குறித்து கேட்டுள்ளனர். அப்போதும், குழந்தை தொட்டிலில் இருந்து விழுந்து இறந்ததாக அவர் கூறி இருக்கிறார்.
இதில் கரிஷ்மா மீது சந்தேகம் அடைந்து, இது தொடர்பாக திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழக வளாக போலீசில் புகார் அளித்திருக்கின்றனர்.
புகாரை பெற்று கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கரிஷ்மாவிடம் விசாரித்துள்ளனர். அப்போது கரிஷ்மா, போலீசாரிடம் முன்னுக்கு பின்னாக பதில் கூறி இருக்கிறார்.
இதை தொடர்ந்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்ததில், கரிஷ்மா குழந்தையை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
மேலும், கணவரிடம் சண்டை போட்ட கோபத்தில் இருந்த நான் ஆத்திரத்தில் குழந்தையை தரையில் அடித்து கொன்றுவிட்டேன்” என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து போலீசார், கரிஷ்மாவை கைது செய்துள்ளனர்.
கல்நெஞ்சம் படைத்த கொடூரத் தாயின் இந்த செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.