நெல்லை: திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏதாவது பரபரப்பாக பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இந்நிலையில், மேலும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார்.
அவர் ஜனதா கட்சியை நடத்தி வந்தபோது. நெல்லை மாவட்ட செயலாளராக இருந்தவர் பாலசுப்பிரமணியன்.
கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சுப்பிரமணியன் சுவாமி சேர்ந்த போது பாலசுப்பிரமணியனும் அக்கட்சியில் சேர்ந்து கொண்டார்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியன்-சுந்தரி ஆகியோரின் மகன் பாலசண்முகம்- சிவஞானசெல்வி திருமணம் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முருகன் கோயில் இன்று காலை நடைபெற்றது.
அப்போது மணமகளின் பெற்றோர் தாம்பாள தட்டில் வைத்து தாலியை தொட்டு மணமகனிடம் எடுத்துக்கொடுக்குமாறு, சுப்பிரமணியின் சுவாமியிடம் கொடுத்தனர்.
தாலியை பெற்றுக் கொண்டு கையில் வைத்தபடி, கண்களை மூடிக் கொண்டு இறைவனிடம் வேண்டிக்கொண்டார் சுப்பிரமணியன் சுவாமி.
பின்னர், தாலியை மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக அவரே மணமகள் கழுத்தில் கட்டுவதற்காக கொண்டு சென்றார். அப்போது, அருகில் இருந்த சந்திரலேகா பதறியபடி, சுப்பிரமணியன் சுவாமியை கையை தட்டி தடுத்ததோடு, மணமகனிடம் தாலியை கொடுக்குமாறு சொன்னார்.
அதன் பின்னரே சுதாரித்துக் கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, மணமகனிடம் தாலியை கொடுத்தார். இதைத் தொடர்ந்து மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
மணமகனிடம் தாலியை கொடுக்க வேண்டிய சுப்பிரமணியன் சுவாமி, மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சம்பவம் மணமகள் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, சுப்பிரமணியன் சுவாமி ஏகத்திற்கும் கலாய்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்.