சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற்றதை தொடர்ந்து, ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.அவருடன் புதிய தமிழக அமைச்சரவையும் பதவி ஏற்கிறது. புதிய அமைச்சரவையில் ஜெயலலிதாவுடன் சேர்த்து மொத்தம் 29 அமைச்சர்கள் இடபெறுகிறார்கள்.
ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் பெயர் பட்டியல்:வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை பட்டியல்..
1. ஜெயலலிதா (முதல்வர்) – இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, பொது நிர்வாகத்துறை
2. ஓ.பன்னீர்செல்வம் – நிதி, பொதுப்பணித்துறை
3. நத்தம் விஸ்வநாதன் – மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை
4. வைத்திலிங்கம் – வேளாண், நகர்ப்புற மேம்பாடு, ஊரக வீட்டு வசதித் துறை
5. எடப்பாடி பழனிச்சாமி – நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகம், வனம்
6. மோகன் – தொழிலாளர் நலன், ஊரகத் தொழில் துறை
7. வளர்மதி – சமூக நலத்துறை, சத்துணவுத்துறை
8. பழனியப்பன் – உயர்கல்வித்துறை,
9. செல்லூர் கே.ராஜு – கூட்டுறவுத்துறை
10. ஆர்.காமராஜ் – உணவு, இந்து சமய அறநிலையத்துறை
11. தங்கமணி – தொழில் துறை
12. செந்தில் பாலாஜி – போக்குவரத்துத் துறை
13. எம்.சி.சம்பத் – வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை
14. டி.கே.எம்.சின்னையா – கால்நடை பராமரிப்புத் துறை
15. கோகுல இந்திரா – கைத்தறி மற்றும் தணிநூல் துறை
16. எஸ்.பி.வேலுமணி – நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டத்துறை
17. சுந்தரராஜ் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை
18. எஸ்.பி.சண்முகநாதன் – சுற்றுலாத்துறை
19. என்.சுப்பிரமணியன் – ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
20. ஜெயபால்-மீன்வளத்துறை
21. முக்கூர் என்.சுப்பிரமணியன் – தகவல் தொல்நுட்பத் துறை
22. ஆர்.பி.உதயகுமார் – வருவாய்த் துறை
23. ராஜேந்திரபாலாஜி – செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை
24. பி.வி.ரமணா- பால்வளத் துறை
25. கே.சி.வீரமணி – பள்ளிக் கல்வித்துறை,
26. தோப்பு வெங்கடாசலம்- சுற்றுச்சூழல் துறை
27. பூனாட்சி – காதி, கிராமத்தொழில் துறை
28. அப்துல் ரஹீம் – பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை
29. விஜயபாஸ்கர் – மக்கள் நல்வாழ்வுத்துறை
முதலமைச்சராக ஜெ. தேர்வு
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா மற்றும் 3 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி விடுவித்தது. இதையடுத்து, முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பதற்கு ஏற்பட்டிருந்த தடை நீங்கியது.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (22 ஆம் தேதி) காலை 7 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஜெயலலிதா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பன்னீர் செல்வம் ராஜினமா
இதனையடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய 5 அ.தி.மு.க. அமைச்சர்கள் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி ஜெயலலிதாவிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்தார்.
பன்னீர் செல்வம் ராஜினாமா
அதன் பின்னர் இன்று காலை 8 மணியளவில் கிண்டி ராஜ் பவனில் கவர்னர் ரோசய்யாவை சந்தித்தார். அப்போது, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்தார்.
ஜெயலலிதாவுக்கு கவர்னர் அழைப்பு…
அதனைத்தொடர்ந்து பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்ற கவர்னர், தமிழக அமைச்சரவையை விரைவில் அமைக்கும்படி ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார்.அதன்படி இன்று பிற்பகல் கவர்னரை சந்தித்த ஜெயலலிதா, , தனது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பட்டியலை வழங்கினார்.
நாளை பதவியேற்பு
இதனையடுத்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை நடைபெறும் விழாவில், தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருடன் மற்ற 28 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா; அமைச்சரவை பட்டியலை வழங்கினார்! (படங்கள்)
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், 7 மாதங்களுக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்து இன்று வெளியேற வந்த ஜெயலலிதா, ஆளுநரை சந்தித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் இருந்து பிற்பகல் சரியாக 1.28 மணிக்கு ஜெயலலிதா காரில் ஆளுநரை பார்க்க சென்றார். ஜெயலலிதாவின் வாகனத்தை தொடர்ந்து சுமார் 20 வாகனங்கள் பின் தொடர்ந்து செல்கின்றன.
வெளியே வந்தார் ஜெ. ; போயஸ் தோட்டத்திலிருந்து… பெரியார் சிலை வரையிலான நிகழ்வுகளின் முழு தொகுப்பு!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், 7 மாதங்களுக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்து இன்று வெளியே வந்த ஜெயலலிதா, ஆளுநரை சந்தித்து, தனது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பட்டியலை வழங்கினார்.
பிற்பகல் 1.28 ஆளுநர் மாளிகையை நோக்கி…
சென்னை போயஸ் கார்டனில் இருந்து பிற்பகல் சரியாக 1.28 மணிக்கு ஜெயலலிதா காரில் ஆளுநரை பார்க்க சென்றார்.
பிற்பகல் 1.54: விநாயகர் கோவில் முன் வழிபாடு
ஜெயலலிதாவின் வாகனத்தை தொடர்ந்து சுமார் 20 வாகனங்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில் அருகே 1.54 மணி அளவில் ஜெயலலிதாவின் கார் கடந்தபோது, மெதுவாக சென்றது. அப்போது காரில் இருந்தபடியே விநாயகரை வழிபட்டார் ஜெயலலிதா.
பிற்பகல் 2.05: ஆளுநருடன் சந்திப்பு
இந்நிலையில் பிற்பகல் 2..02 மணி அளவில் ஜெயலலிதாவின் வாகனம் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தது. 2.05 ,மணி அளவில் அளுநர் ரோசய்யாவை சந்தித்தார்.
அப்போது பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு, அவர் தன்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்து கையெழுத்திட்ட கடிதம் மற்றும் தனது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார்.
பிற்பகல் 2.34: ஆளுநர் மாளிகையில் இருந்து ஜெ. புறப்பட்டார்
பிற்பகல் 2.34 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து ஜெயலலிதா காரில் புறப்பட்டார். அரை மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பிற்பகல் 3 மணி; எம்.ஜி. ஆர் சிலைக்கு மரியாதை
ஆளுநருடனான சந்திப்பை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட ஜெயலலிதா, பிற்பகல் 3 மணி அளவில் அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாஸா சிக்னல் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பிற்பகல் 3. 05: அண்ணா சிலைக்கு மரியாதை
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ஜெயலலிதா, பிற்பகல் 3.05 மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிற்பகல் 3.17: பெரியார் சிலைக்கு மரியாதை
அதனைத் தொடர்ந்து 3.15 மணி அளவில் ஜெமினி மேம்பாலம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு வந்து சேர்ந்த ஜெயலலிதா, பெரியா சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. இந்த நிகழ்வுகளை முடித்த பிறகு, அவர் தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
கட்சியினர் உற்சாக வரவேற்பு
முன்னதாக 7 மாதங்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த ஜெயலலிதாவை, அவரது இல்லம் முன்பாக திரண்டிருந்த அதிமுகவினர் ஏராளமானோர் பூரண கும்ப மரியாதையுடனும், மலர் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்கள் முழங்கவும், ஆடிப்பாடியும், மலர் தூவியும், ஜெயலலிதாவை வாழ்த்தியும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் வழிநெடுகிலும் ஜெயலலிதாவுக்கு கட்சியினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காலை 7 மணி: ஜெயலலிதா முதல்வராக தேர்வு
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா மற்றும் 3 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி விடுவித்தது. இதையடுத்து, முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பதற்கு ஏற்பட்டிருந்த தடை நீங்கியது.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (22 ஆம் தேதி) காலை 7 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடை பெற்றது.
இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஜெயலலிதா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 10 நிமிடங்களே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்து அதற்கான கடிதத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டார்கள்.
காலை 7.30 மணி; ஜெயலலிதாவுடன் பன்னீர் ஆலோசனை…
இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய 5 அ.தி.மு.க.
அமைச்சர்கள் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி ஜெயலலிதாவிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
காலை 8 மணி: பன்னீர் செல்வம் ராஜினாமா…
அதன்பின், கடந்த 7 மாதங்களாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை 8 மணியளவில் கிண்டி ராஜ் பவனில் கவர்னர் ரோசய்யாவை சந்தித்தார். அப்போது, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்தார்.
ஜெயலலிதாவுக்கு கவர்னர் அழைப்பு…
பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்ற கவர்னர், தமிழக அமைச்சரவையை விரைவில் அமைக்கும்படி ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புதிய அமைச்சரவை பட்டியலை அளிக்குமாறும் கவர்னர் கேட்டுக்கொண்டார்.
ஜெ. வருகையால் அண்ணா சாலை ஸ்தம்பிப்பு: பயணிகள் கடும் அவதி! (படங்கள்)
சென்னை: ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா சாலைக்கு ஜெயலலிதா வந்ததால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
போயஸ் கார்டனில் இருந்து இன்று பிற்பகல் 1.28 மணிக்கு காரில் புறப்பட்ட ஜெயலலிதா, ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆளுநருடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல், தான் ஆட்சியமைக்கப்போவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் அங்கிருந்து ஜெயலலிதா கார் கிண்டி, வள்ளுவர் கோட்டம், ஸ்டெர்லிங் ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து அண்ணாசாலை செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிண்டியில் சுமார் 5000க்கும் அதிகமான இரு சக்கர,, நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன.
பேருந்தில் பயணிகள் படிகளில் தொங்கிக்கொண்டே சென்றனர். ஆனால், இதை ஒழுங்குபடுத்த காவல்துறை இல்லாததால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.
அதிமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் வழிநடத்துவதில் கவனம் செலுத்தும் காவல்துறை பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டத் தவறிவிட்டது என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.
இருசக்கர வாகன ஓட்டு ஒருவர் கூறுகையில், “கிண்டியில் இருந்து பைக்கில் ஜெமினி பாலம் வருவதற்கு மட்டும் 2 மணி நேரம் ஆகிவிட்டது. இனி, சிம்சன் வரை செல்ல வேண்டும். இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை. அலுவலகத்தில் செல்போன் மூலம் பேசி பர்மிஷன் கேட்டிருக்கிறேன்” என்று புலம்பினார்.
மேலும், சென்னையில் வெயிலின் தீவிரம் மிகுதியான நிலையில், ஜெயலலிதா வருகையையொட்டி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், கிண்டி முதல் சிம்சன் வரை பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். சென்னை அண்ணாசாலையே போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டது.