13 வயதுடைய சிறுமியான மாணவியை அவளது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இராணுவ வீரர் ஒருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் குருநாகல் வீதியில் வசிக்கும் மாணவியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டவராவார்.
குறித்த மாணவியின் வீட்டுக்கு அருகில் உள்ள வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றுக்கு வாகனம் ஒன்றைத் திருத்துவதற்காக வந்துள்ள சந்தேக நபர், வாகனத்தைத் திருத்தும் வரை மூன்று தினங்களாக அங்கு வந்து சென்றுள்ள நிலையிலேயே சந்தேக நபர் குறித்த மாணவியைக் கண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன.
இதன் பின்னர் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியாமல் சிறுமியை அழைத்துச் சென்றுள்ள சந்தேக நபரான இராணுவ வீரர, சில நாட்களாக சிறுமியோடு இருந்துவிட்டு இரகசியமாகவே சிறுமியை அவளது வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தன்னை அழைத்துச் சென்ற தினம் முதல் சந்தேக நபர் தன்னோடு கணவன் மனைவியாக இருந்ததாகவும், தாம் தங்கியிருந்த இடம் எதுவென தனக்குத் தெரியாது எனவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் சந்தேக நபர் கல்பிட்டி மாம்புரி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது மாத்திரம் தெரியும் எனவும், அவர் எந்த முகாமில் பணியாற்றுகிறார் என்ற விபரங்களும் தெரியாது எனவும் சிறுமி பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோரின் முறைப்பாட்டையடுத்து சிறுமி வைத்திய பரிசோதணைக்காக புத்தளம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரைக் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த புத்தளம் பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.