புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலையை அடுத்த யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

வித்தியா காணாமற்போனது தொடக்கம், அவர் படுகொலை செய்யப்பட்டது, அதையடுத்து ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமை உள்ளிட்டவற்றை அடங்கியதான விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ஜோன் அமரதுங்க பணித்துள்ளார்.

வித்தியா படுகொலைக்கு சிறிலங்கா காவல்துறையினரின் பொறுப்பற்ற செயற்பாடும் ஒரு காரணம் என்று பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.

அத்துடன், இந்தப் படுகொலையுடன் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும், சுவிற்சர்லாந்தில் இருந்து வந்தவரை, உயர் காவல்துறை அதிகாரியே தப்பிக்க உதவினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே, இதுகுறித்து விரிவான அறிக்கையொன்றை அமைச்சர் ஜோன் அமரதுங்க கோரியிருக்கிறார்.

விசாரணைகளில் காவல்துறையினர் எவரேனும் குற்றம் இழைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply