மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்டூர் தேவாலயத்துக்கு வீதியில் உள்ள உள்ள வீட்டில் வைத்தே சச்சிதானந்தம் மதிநயன் (46வயது) என்பரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டுச் சென்றதாகவும் தலைப்பகுதியில் இந்த துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொல்லப்பட்டவர் சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொண்டதன் காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரிடம் உரையாடியுள்ளனர்.
இந்த நிலையில் திடிரென துப்பாக்கி சத்தம் கேட்கவே உயிரிழந்தவரின் மனைவி வெளியில் வந்துபார்த்த போது அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இவர் மீது துப்பாக்கி சூட்டை நடாத்தியவர்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.பி.ரசிக்க சம்பத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மாவட்ட தடவியல் பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.