எமக்கு காசு பணம் தேவையில்லை. எமது தங்கையின் உயிரைவிட எமக்கு காசு பணம் பெரிதல்ல. தங்கையை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்று படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் சகோதரியான நிஷாந்தி தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
தங்கையின் படுகொலை தொடர்பில் எமக்கு நீதி வேண்டும். நாம் நிதி உதவியோ அல்லது வேறு உதவிகளோ கோரவில்லை.
எமக்கு தங்கையின் உயிரே பெரியது. அதனைவிட வேறு ஒன்றும் எமக்குத் தேவை இல்லை. தங்கையைப் படுகொலை செய்த பத்துப்பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தபோது எனது தாயாரையும் சகோதரரையும் சந்தித்திருந்தார்.
இதன்போது எமது தாயார் எமக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதால் பாதுகாப்பு வழங்குமாறு கோரியிருந்தார்.
இதனையடுத்து வவுனியா பல்கலைக்கழகத்தில் நான் கல்வி கற்பதனால் அங்கு ஒரு வீட்டைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாம் அவரிடம் எதையுமே கேட்கவில்லை. பாதுகாப்பையும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதையுமே வேண்டினோம்.
எமது தங்கையின் உயிரைவிட எமக்கு எதுவுமே முக்கியமானதல்ல.
தங்கையின் படுகொலையையடுத்து பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் எமது வீட்டுக்கு வந்தார். அதன் பின்னர் இந்த விடயங்கள் தொடர்பில் அவர் நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
படுகொலைச் சந்தேகநபரான சுவிஸிலிருந்து வந்தவரை பிரதியமைச்சர் விஜயகலாவே தப்பிக்கவைத்ததாக முன்னர் தவறாக எமக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த விடயம் தொடர்பில் நாம் தெளிவடைந்துள்ளோம். சந்தேக நபர்களைக் கைதுசெய்வதற்கான தகவல்களை வழங்கி அவர்களின் கைதுக்கு அவரே வழி வகுத்தமையும் எமக்கு தற்போது தெரியவந்துள்ளது.
எமது தங்கையின் படுகொலை விடயத்தில் எமக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இந்தப் படுபாதக செயலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுவே எமது கோரிக்கையாகும்.