நரிழிவு நோயானது, நோயாளிகளின் பாதங்களையே வெகுவாகத் தாக்குகிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளர்களின் உடல் அவயவங்கள் ஒவ்வொன்றுமே அந்த நோயினால் பாதிக்கப்படவே செய்கின்றன.

பாதங்களைப் பொறுத்தமட்டில் இரண்டு பிரச்சினைகள் தோன்றலாம். ஒன்று, பாத நரம்புகளின் செயற்பாடு பாதிக்கப்படுவது. அடுத்தது, பாதங்களுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது.

பாதங்களில் தொடு உணர்ச்சி, வலியுணர்ச்சி என்பனவற்றை மூளைக்கு உணர்த்துவது பாதங்களில் காணப்படும் நரம்புகளே.

பாதத்தின் இயக்கத்திற்கும், கால் விரல்களின் அசைவுகளுக்கும் காலில் காணப்படும் சிறு சிறு தசைகளின் உதவி அவசியம்.

அந்தத் தசைகளின் இயக்கத்தையும் நரம்புகளே செய்கின்றன. நீரிழிவு நோயாளர்களின் உடலில், இன்சுலின் குளறுபடியால், குளுக்கோஸின் அளவு கூடுகிறது.

இப்படிக் கூடும் குளுக்கோஸானது, பாதத்தின் நரம்புகளையும் அதன் பின் அதன் தசைகளையும் பாதிக்கின்றன.

நரம்புகளின் செயற்பாட்டைக் குறைத்து விடுகிறது. நரம்புகளில் உள்ள இரத்தக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி, நரம்புகள் சீராக இயங்குவதைத் தடைசெய்கின்றது. நரம்புகளின் இயக்கம் சீராக இல்லை என்றால், பாதத்தின் தொடு உணர்ச்சியில் குளறுபடிகள் தோன்றும்.

உணர்ச்சிகளை உண்டாக்கும் நரம்புகள் இவ்வாறு அரைகுறையாகப் பாதிக்கப்பட்டால், சில உணர்ச்சிகளை நோயாளிகள் மாற்றி உணர்வார்கள்.

பாதத்தில் வலி ஏற்பட்டால் அது அவர்களுக்கு வலியுணர்ச்சியாகத் தோற்றாது. எரிச்சல் உணர்வாக அதாவது பாதம் எரிவதைப் போன்ற உணர்ச்சியையே கொடுக்கும்.

காலில் ஆடைகள் உரசும்போது, அது ஆடை உரசுவதைப்போன்ற உணர்வைத் தராது. வேறு ஏதேனும் பொருள் காலில் முட்டுவது போன்ற உணர்வையே தரும். வெறுந்தரையில் நடக்கும்போது மெத்தையில் நடப்பதைப் போன்று உணர்வார்கள்.

பாதணிகள், விரல்களின் பிடிமானம் அற்று முன்னால் போய் விழும். இதுபோன்ற உணர்ச்சிகளை ஆரம்பத்திலேயே உணர்ந்து சரிப்படுத்தாவிட்டால், நாளடைவில், பாதங்களின் நரம்புகள் முழுமையாக இயக்கமற்றுப் போய், கால்களின் உணர்ச்சியே இருக்காது.

இவ்வாறு உணர்ச்சியே அற்ற பாதங்களுடனேயே சிலர் நடந்து திரிவர். அவ்வாறு நடக்கும்போது ஏதேனும் ஒரு பொருளில் அல்லது கத்தி போன்ற ஆயுதத்தில் பாதங்கள் மோதிக் காயம் உண்டானாலும் அவர் அதை உணரமாட்டார்.

அது புண்ணாகும் வரை, பாதம் மோதுப்பட்டதையே அவர் அறிய மாட்டார். இப்படிப் புண்ணாகும் பாதம், நீர் கோர்த்துக்கொண்டு கடுமையான பாதிப்பைத் தரும்போதோ அல்லது பாதத்தில் இருந்து இரத்தம் ஒழுகுவதைக் கண்ட பின்போதான் அந்தப் பாதிப்பு அவருக்குத் தெரியவரும்.

அடுத்து, நீரிழிவு நோயாளர்களின், பாதங்களின் இயக்கத்திற்குத் தேவையான இரத்தக் குழாய்களில் அதிகளவான கொழுப்புச் சென்று அடைத்துக் கொள்வது.

நமது உடலில் உருவாகும் அசுத்த இரத்தத்தை அப்புறப்படுத்தி, உறுப்புகளுக்குத் தேவையான சுத்த இரத்தத்தை வழங்கும் பணியை இரத்தக் குழாய்கள் செய்கின்றன.

இரத்த ஓட்டம் தடைப்படுவதால், அசுத்த இரத்தம் ஒரே இடத்தில் தேங்கி, அந்த அவயவத்தை அழுகச் செய்துவிடுகிறது.

இதேபோலத்தான், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதப் பகுதியின் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுவிடுவதால், பாதம் அழுகிப்போய்விடுகிறது.

80 சதவீதமான நீரிழிவு நோயாளர்களுக்கு அவர்களின் நரம்புகளே பாதிப்புறுகின்றன. பதினைந்து முதல் இருபது சதவீதத்தினருக்கு இரத்தக்குழாய் பாதிக்கப்படுகின்றது.

சிலரது பாதங்களைப் பார்த்தவுடனேயே தெரிந்துகொள்ளலாம், அவற்றின் பாதிப்புகள் எந்தளவுக்கு இருக்கின்றன என்பதை.

முக்கியமாக, அவர்களின் விரல்கள் அதைக் காட்டிக்கொடுத்துவிடும். பாத நரம்புகள் அல்லது இரத்தக் குழாய்கள் பெரும்பாதிப்புக்கு உட்பட்டிருந்தால், அவர்களது விரல்கள் சற்று வளைந்து காணப்படும்.

விரல்களின் இந்த வளைவை மருத்துவர்களால் மட்டுமே உணர முடியும். இன்னும் சிலருக்கு அவர்களின் பாதம் நீர்த்தன்மை அற்று உலர்ந்து போயிருக்கும்.

இன்னும் சிலர், இதுபோன்ற காயங்களை ஆற்றிய பின், அவை குறித்து அக்கறை செலுத்த மாட்டார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், ஒரு முறை இதுபோன்ற காயங்கள், புண்கள் தோன்றியவர்களுக்கு, இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இதேபோன்ற காயங்கள் ஏற்படுவதற்கு எழுபது சதவீத வாய்ப்புகள் உண்டு.

ஆகையால், புண் குணமாகிவிட்டது என்று அசட்டையாக இருந்துவிடாமல், மருத்துவரின் ஆலோசனைப்படி தம் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளவேண்டும்.

Share.
Leave A Reply