விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவரது தனிப்பட்ட பயன்பாட்டில் இருந்த விலைமதிப்பானதும், சக்திவாய்ந்ததுமான கைத்துப்பாக்கி மற்றும் அவரது அடையாளத் தகடு உள்ளிட்ட பொருட்கள் காணாமற்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிக்கட்டப் போரின் முடிவில், 2009 மே 19ஆம் நாள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உடல் மீட்கப்பட்ட பின்னர், அவரது தனிப்பட்ட பொருட்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவற்றுள் எந்த நேரமும், விடுதலைப் புலிகளின் தலைவரின் இடுப்புப்பட்டியில் இருக்கும், சக்திவாய்ந்த்தும், விலைமதிப்பானதுமான, ஜி-லொக்  17 ரக (GLOCK 17)   9 மி.மீ  கைத்துப்பாக்கியும் அடங்கும்.

அத்துடன், விடுதலைப் புலிகளின் தலைவர், கைக்குண்டு ஏவியாகவும் தொழிற்படக் கூடிய ஏ எம்-16 ஏ2 (M16A2)   ரகத் துப்பாக்கியையும் அடிக்கடி பயன்படுத்தி வந்திருந்தார்.

மேலும், வே. பிரபாகரனின் த.வி.பு – 01 என்ற இலக்கம் கொண்ட அடையாளப்பட்டியையும் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இவை எங்குள்ளன என்று சிறிலங்கா படை அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.

பாதுகாப்பு உயர்மட்டத்தில் உள்ள சில அதிகாரிகள், புலிகளின் தலைவரின் தனிப்பட்ட பொருட்களை எடுத்துக் சென்றிருக்கலாம் என்று கூறப்படுவதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply