இது நடந்தால் மஹிந்த அதனை பயன்படுத்திவிடுவார், நாங்கள் இந்த விடயத்தை தீர்க்க முற்பட்டால் மஹிந்த மீண்டும் வருவதற்கு அது வாய்ப்பாகிவிடும் – இப்படி மஹிந்தவை காரணம் காட்டியே கடந்த நான்கு மாதங்களை இந்த அரசு கடத்தியிருக்கிறது.  ஆனால், தெற்கில் மஹிந்த தொடர்பான அச்சத்தில் எந்தவொரு முன்னேற்றகரமான மாற்றங்களும் இதுவரை ஏற்படவில்லை….
………………………………………………………………………………………………….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எவ்வாறு அமையப் போகிறது? -யதீந்திரா
 
Jaffna_4-e1434434893569நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது. முன்னர் இம்மாதம் நடுப்பகுதியில் கலைக்கப்படலாம் என்றவாறான செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், தற்போது வெளிவரும் செய்திகளின்படி 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றவாறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

இவ்வாறானதொரு சூழலில்தான் தெற்கின் அரசியல் அரங்கு குழப்பங்களின் அரங்காக உருமாறிக்கிடக்கிறது.

குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர், இதில் மஹிந்தவின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்கள் அடங்கலாக, 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

இதன் விளைவாக தற்போது 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருக்கிறது. ஆனால், இங்கும் ஒரு சிக்கல் இருக்கிறது.

20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியுமென்று சிலர் கூறுகின்றனர்.

அதாவது, 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் குறித்த ஒரு கட்சி உச்ச நீதிமன்றத்தில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகத்தான் தேர்தல் இடம்பெற வேண்டுமென்று வழக்குத் தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பம் உண்டென்றும், அவ்வாறனதொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் தேர்தலை முன்னர் வாக்குறுதி அளித்தவாறு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னதாக நடத்த முடியாத சூழல் ஏற்படலாமென்றும் ஒரு பார்வையுண்டு.

ஆனால், இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வெளிவரவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வெளிவரவேண்டிய இவ்வறிக்கை இலங்கையில் ஏற்பட்ட ஸ்திரமற்ற அரசியல் சூழலை கருத்தில் கொண்டே பிற்போடப்பட்டது.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் எதிர்பார்த்தது போன்று சிங்கள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவை ஆதரித்திருக்கவில்லை.

இவ்வாறானதொரு சூழலில் போர்க் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை இக்காலப்பகுதியில் வெளியிடுவதானது மஹிந்தவின் எதிர்ப்பிரச்சாரங்களுக்கு சாதகமாக அமைந்துவிடலாம் என்னும் அடிப்படையில்தான் குறித்த அறிக்கை பிற்போடப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் மஹிந்தவின் செல்வாக்கை சரித்துவிடலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது ஆனால், பலரும் எதிர்பார்த்தது போன்று மஹிந்த ராஜபக்‌ஷவின் செல்வாக்கு பெருமளவில் வீழ்சியடையவில்லை. சிலரது கணிப்பில் அது மேலும் அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், எதிர்வரும் செப்டெம்பரிலாவது குறித்த அறிக்கை வெளிவருமா என்னும் சந்தேகமும் சிலரால் எழுப்பப்படுகிறது.

அறிக்கை செப்டெம்பரில் வெளிவர வேண்டுமாயின், நாடாளுமன்ற தேர்தல் செப்டெம்பருக்குள் இடம்பெற வேண்டும். அவ்வாறில்லாது தேர்தல் திகதி பின்செல்லுமாக இருந்தால், அறிக்கை மீண்டும் அடுத்த ஆண்டு மார்ச்சுக்கு பின்தள்ளப்பட வேண்டும்.

HB293djஏனெனில், அவ்வறிக்கையில் இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்னும் அடிப்படையில் 49 பெயர்களின் விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக ஏலவே செய்திகள் வெளியாகியிருந்தன.

வெளியான தகவல்களின்படி பட்டியலில் முதலாவது இடத்தில் மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரும் இரண்டாம் நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் பெயரும் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

உண்மையில் இவ்வாறானதொரு அறிக்கை வெளிவந்தால் நிச்சயமாக மஹிந்தவின் மீதான சிங்கள அனுதாபம் அதிகரிக்கவே செய்யும்.

எனவே, தேர்தல் பின்னுக்குச் செல்லுமாயின் இவ்வறிக்கை வெளிவரும் காலமும் பின்னுக்குச் செல்லுமா என்னும் கேள்வி எழுவது நியாயமே!

ஆனால், ஒரு சிலர் வேறு விதமாகவும் அபிப்பிராயப்படுகின்றனர்.

அதாவது, அறிக்கை வெளிவரலாம், ஆனால், அதிலுள்ள மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் அகற்றப்பட்டு அறிக்கை வீரியமிழக்கச் செய்யப்படலாம்.

நான் ஏலவே குறிப்பிட்டவாறு, தேர்தல் ஒருவேளை செப்டெம்பருக்குப் பின்னர் இடம்பெற வேண்டிய சூழல் ஏற்பட்டால், குறித்த அறிக்கை வெளிவருவது தாமதப்படலாம் அல்லது குறித்த அறிக்கை வீர்யமிழக்கச் செய்யப்படலாம்.

இப்படியெல்லாம் ஏன் நிகழ வேண்டும் என்று ஒரு சாதாரண தமிழ் குடிமகன் கேட்கலாம், அதற்கான பதில் இந்திய அமெரிக்க மற்றும் மேற்குலக சக்திகளின் நலன்களும் ஆட்சி மாற்றமும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன என்பதுதான்.

எனவே, நிகழ்ந்திருக்கும் மாற்றத்தை ஒரு மாற்றமாக பேணிக்கொள்வதற்கான முயற்சிகளில்தான் அவர்கள் ஈடுபடுவர்.

எல்லாவற்றையும் கூட்டி கழித்து பெருக்கி நோக்கினால் வரப்போகும் விடை, தமிழ் மக்களுக்களின் பிரச்சினை அவர்களுக்கு ஒரு பிரச்சினையல்ல.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தமிழ் மக்கள் மீண்டுமொரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்கவுள்ளனர்.

இந்தத் தேர்தலின் போது தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறானதொரு ஆணையை தமிழ் மக்களிடமிருந்து கோரப் போகிறது?

அதாவது, எவ்வாறானதொரு தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தமிழ் மக்களிடம் செல்லவிருக்கிறது?

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது, முதல் கோணல் முற்றிலும் கோணலாகும்.

ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டமைப்பு எதிரணிகளின் போது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.

இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டமைப்பு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது என்னும் கேள்வி எழுகிறது.

தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் மைத்திரிபாலவை ஆதரித்தமையானது அவர் மீதான நம்பிக்கையினால் அல்ல. மாறாக மஹிந்தவின் மீதான வெறுப்பினாலாகும்.

ஆனால், பொதுவாக தமிழ் மக்கள் அதிகாரத்தில் இருக்கும் அரசுகளை எதிர்த்து நிற்பவர்களுக்கே பெருவாரியாக வாக்களித்து வந்திருக்கின்றனர்.

அதாவது, சிங்கள ஆட்சியாளர்கள் மீதான தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாகவே தேர்தல்களை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அவ்வாறு பயன்படுத்துமாறுதான் தமிழ் அரசியல் தலைமைகளும் மக்களுக்கு அறிவூட்டியிருக்கின்றன.

ஆனால், இம்முறை இடம்பெறவுள்ள நடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டமைப்பு வழமையான அரச எதிர்ப்பு அணுகுமுறையை பிரயோகிப்பதில் தடைகளுண்டு.

tna_12-e1419921285414ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கூட்டமைப்பு புதிய அரசுடன் ஒரு அரை இணக்கத்துடன் செயற்பட்டுவருகிறது.

ஆனால், இதில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் உண்டு. குறிப்பாக சம்பந்தன், மாவை மற்றும் சுமந்திரன் ஆகியோர் புதிய அரசுடன் அதிகம் நெருங்கிச் செயற்பட்டுவருகின்ற அதே வேளை, கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய கட்சிகள் அரசின் அணுகுமுறைகள் தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அவர்களது விமர்சனங்களில் நியாயமுண்டு. ஏனெனில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பில் எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

மாறாக, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசினால் தெற்கில் குழப்பங்கள் ஏற்படலாம் என்னும் தெற்கின் பார்வையே முன்வைக்கப்பட்டது.

இது பற்றி கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறும் போது, தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசினால், இங்கு அதிகமான ‘ஆல்’கள் பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது.

mahinda7இது நடந்தால் மஹிந்த அதனை பயன்படுத்திவிடுவார், நாங்கள் இந்த விடயத்தை தீர்க்க முற்பட்டால் மஹிந்த மீண்டும் வருவதற்கு அது வாய்ப்பாகிவிடும் – இப்படி மஹிந்தவை காரணம் காட்டியே கடந்த நான்கு மாதங்களை இந்த அரசு கடத்தியிருக்கிறது.

ஆனால், தெற்கில் மஹிந்த தொடர்பான அச்சத்தில் எந்தவொரு முன்னேற்றகரமான மாற்றங்களும் இதுவரை ஏற்படவில்லை.

மாறாக, மஹிந்தவின் செல்வாக்கு முன்னரைவிடவும் அதிகரித்திருப்பதாகவே சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மைத்திரிபால, ரணில் ஆகியோர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு பற்றி பேசுவார்களா? நிலைமை இவ்வாறிருக்கின்ற போது கூட்டமைப்பு எவ்வாறானதொரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து மக்கள் ஆணையைக் கோரப் போகிறது?

உதாரணமாக, தீர்வு பற்றி விஞ்ஞாபனத்தில் பேசுவதாக இருந்தால் எவ்வாறானதொரு தீர்வு பற்றி கூட்டமைப்பால் பிரஸ்தாபிக்க முடியும்?

வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பகுதியில் கொழும்பின் தலையீடுகளின்றி தமிழ் மக்கள் தங்களை தாங்களே தீர்மானித்து வாழ்வதற்கான ஒரு ஏற்பாட்டை அரசியல் சாசன ரீதியாக உறுதிப்படுத்துவதற்கு ஏற்றவாறான ஒரு அரசியல் கட்டமைப்பை கோரலாமா?

ஆனால், வடக்கு – கிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் என்னும் சொற்தொடர்களை பயன்படுத்தினால் மஹிந்த மீண்டும் வந்துவிடலாம்.

எனவே, அவற்றை கூட்டமைப்பு தன்னுடைய தேர்தல் விஞ்ஞானத்தில் குறிப்பிடுவது தற்போதைய சூழலில் உசிதமானதல்ல.

அதாவது, எதனையும் வெளிப்படையாகக் கூற முடியாது, அப்படிக் கூறினால் மஹிந்த எழுந்து விடுவார், எனவே, அரசை விமர்சிக்கவும் முடியாது, அரசிற்கு நெருக்கடியான சொற்களை உச்சரிக்கவும் முடியாது. இப்படியான சூழலில் கூட்டமைப்பு எவ்வாறானதொரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைக்கப் போகிறது?

நாடக வடிவங்களில் குறியீட்டு நாடங்கள் என்னும் ஒரு வகை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது, சில விடயங்களை வெளிப்படையாகப் பேச முடியாத சூழலில், அங்க அசைவுகள், வேறுபட்ட நிற ஆடைகள் ஆகியவற்றை பயன்படுத்தி சில விடயங்களை மக்களுக்கு கொண்டு சேர்பிக்க முற்படுவர்.

சர்வாதிகார நாடுகளில் வாழுகின்ற கலைஞர்கள் இப்படியான உக்திகளை பயன்படுத்துவார்கள். கிட்டத்தட்ட தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளும் குறியீட்டு நாடகம் போன்றாகிவிட்டது.

தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை வெளிப்படையாகப் பேசினால் மஹிந்த எழுந்து விடுவார், எனவே, அவர் எழுந்துவிடாத வகையில்தானா கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையப் போகிறது? இதில் கூட்டமைப்பின் தலைவர்களின் நிலைப்பாடு என்ன?

மஹிந்த தன்னுடைய ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து விடுவார்கள் என்று கூறி தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்து வந்தார்.

வெற்றி மமதையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கே அவர் தயாராக இருக்கவில்லை.

Ranil-maithriதற்போது மைத்திரிபால – ரணில் தலைமையிலான அரசு மஹிந்தவை காரணம் காட்டி தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை பிற்போட முற்படுகிறது.

மஹிந்தவிடம் இருந்தது மமதை என்றால், புதிய ஆட்சியாளர்களிடம் இருப்பது தங்களின் ஆட்சியை மஹிந்த தட்டிப்பறித்து விடுவாரோ என்னும் அச்சம். ஆனால், இதிலுள்ள துர்ப்பாக்கியம் என்னவென்றால், இன்று தெற்கின் அச்சத்திற்கு பலியாவதும் தமிழ் மக்கள்தான். ஆனால், கூட்டமைப்பின் தலைவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிக கரிசனை காண்பிக்க வேண்டியது அவசியம்.

ஒருவேளை தேர்தலின் பின்னர் தேசிய அரசில் கூட்டமைப்பு இணைந்து செயற்பட விரும்பின், அதனையும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு, மக்களின் ஆணையை கோர வேண்டியதும் அவசியம். மக்களது ஆணையில்லாமல் கூட்டமைப்பு அவ்வாறானதொரு முடிவை எடுக்க முடியாது.

-யதீந்திரா-

Share.
Leave A Reply