இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடித்துள்ளதாக அதன் தலைவர் சம்பந்தர் அறிவித்துள்ளார்.
கூட்டமைப்புக்குள் சுமுகமாக பங்கீடு முடிந்தது என்கிறார் சம்பந்தர்
கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று முடிவுகள் எட்டப்பட்டன என்று சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இன்று வவுனியாவில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பங்குபெற்ற கூட்டத்தில் இது முடிவாகியது.
வடகிழக்கிலுள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களில் 29 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அதற்கு கூட்டமைப்பின் சார்பில் 44 பேர் போட்டியிடவுள்ளனர்.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஈபிஆர்எல்எஃப், டெலோ ஆகிய கட்சிகளுக்கு தலா 8 இடங்களும் புளொட் அமைப்பிற்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
நடைபெறவுள்ள தேர்தலில் இளைஞர்கள், பெண்கள் மட்டுமல்லாமல் சமூகத்தின் பல தரப்பினரும் பங்கு கொள்ளத்தக்க வகையில் வேட்பாளர் தெரிவு இடம்பெறும் என்று சம்பந்தர் கூறுகிறார்.
தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்கீட்டின்படி யாரை எதன் அடிப்படையின் தேர்தெடுப்பது என்பது குறித்து கட்சித் தலைவர்கள் கூடி முடிவெடுப்பார்கள் எனவும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.