கடந்த மாகாணசபை தேர்தல் சமயத்தில் வெளியான போலி உதயன் பத்திரிகையை தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன்தான் திட்டமிட்டு அச்சடித்தார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அனந்தி சசிதரன்.
இன்று கொழும்பு தனியார் ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வடமாகாணசபை தேர்தல் அன்று அதிகாலையில் போலி உதயன் பத்திரிகை வெளியாகியிருந்தது. அதில், அனந்தி சசிதரன் மகிந்தவுடன் இணைந்துவிட்டார், யாரும் அவருக்கு வாக்களிக்க வேண்டாமென மாவை சேனாதிராசா அறிவித்ததாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பத்திரிகையை அரசசார்பு குழுக்கள் அச்சிட்டு வெளியிட்டதாக கருதப்பட்டு வந்த நிலையில், அதனை நிராகரித்து, அந்த பத்திரிகையை உதயன் பத்திரிகையே வெளியிட்டதாக அனந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
‘உதயன் பத்திரிகையின் சின்னம், அவர்கள் பாவிக்கும் அதே எழுத்துருதான் பாவிக்கப்பட்டுள்ளது. அதனை உதயன் பத்திரிகையினர்தான் அச்சிட்டனர். எனது வெற்றியை சீர்குலைப்பதை நோக்கமாக கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில் நீதிமன்றத்தை நாடும் சூழ்நிலையில் நான் இருக்கவில்லை’ என்றார்.
தேர்தலில் போட்டியிடும் அனந்தியின் கோரிக்கை நிராகரிப்பு
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று திங்கட்கிழமை 6-ம் திகதி முதல் 15-ம் திகதி வரையில் தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன.
தனித்துப் போட்டியிடுவதா – இணைந்து போட்டியிடுவதா என்பதைத் தீர்மானிக்கும் நடவடிக்கைகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இறங்கியிருக்கின்றன.
வடக்கு, கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய அரசியல் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர் ஒதுக்கீடு தொடர்பாக இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து ஏழாகக் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, அங்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அங்கு கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களைக் களமிறக்குவதற்குத் தீரமானிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அனந்தி சசிதரன், இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இவர், விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவி.
போரினால் பாதிக்கப்பட்ட பெண் என்பதனாலும், இறுதிப் போரின் முக்கிய சாட்சி என்ற வகையிலும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கையின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களில் பாராளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுவதாக அனந்தி சசிசதரன் கூறினார்.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைத் தருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏற்கனவே தான் கோரியிருப்பதாகவும் அனந்தி சசிதரன் பிபிசியிடம் தெரிவித்தார்.
எனினும், அது தொடர்பில் இன்னும் தனக்கு முடிவு எதனையும் சம்பந்தன் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், தனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்பட மாட்டாது என்று தமிழரசுக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு தனது ஆதரவாளரகள் கோரி வருவதாகவும், தமிழரசுக் கட்சியில் இல்லாவிட்டாலும், வேறு கட்சியின் ஊடாகவாவது தேர்தலில் போட்டியிடுமாறு அவர்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்த அவர், இது குறித்து தான் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.