திருச்சி: திருச்சியில் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ள பொதுக்கூட்ட ஏற்பாட்டின் போது காவல்துறை கமிஷனருக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் வரும் 23ம்தேதி காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொள்ள உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை செய்திட, டெல்லியில் இருந்து எஸ்பி ரத்தோர் தலைமையில் உயர்மட்ட சிறப்பு பாதுகாப்பு படையினர் 7 பேர் கொண்ட குழுவினர் இன்று திருச்சி வந்துள்ளனர்.
பின்னர் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட காங்கிரஸார், பொதுக்கூட்டம் நடைபெறும் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த சென்றனர்.
அப்போது மைதானத்தில் மேற்கொள்ளப்பட உள்ள தமிழ்நாடு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தனர்.
அப்போது சிறப்பு பாதுகாப்பு படையினர் கேட்டது போல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல், வேறு வகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக திருச்சி போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் கூறவே, அவருடன் இளங்கோவன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது இளங்கோவன், “நாங்கள் எதிர்ப்பார்ப்பது போல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுங்கள். இது குறித்து தமிழக முதல்வருடன் பேச வேண்டுமா அல்லது பிரதமருடன் பேச வேண்டுமா என்று கூறுங்கள் ..பேசுகிறேன்.
தொடர்ந்து ஆத்திரம் குறையாத இளங்கோவன், “தமிழக போலீசாரின் பாதுகாப்பை நம்பி, ஏற்கனவே எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை இழந்திருக்கிறோம்.
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத போலீஸ்தானே திருச்சி போலீஸ்” என்றார் காட்டமாக. அவரை கட்சியினர் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இளங்கோவன், பாதுகாப்பு ஏற்பாடுகளில் தமிழக போலீசார் சிறந்த ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறோம்.
பாஜக ஆட்சி பீடத்தில் அமர்ந்ததில் இருந்து பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதைபற்றி மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. மக்களுக்கு அநீதி அளிக்கும் அரசாக மத்திய, மாநில அரசுகள் விளங்குகின்றன” என்றார்.