இங்கிலாந்தைச் சேர்ந்த பவுலா மில்லர் குடும்பம் பாசமாக 6 நாய்களை வளர்த்து வருகிறது. இவர்களது அக்கம்பக்கத்து வீட்டினர் கொடுத்த புகாரால், இவர்களுக்கு நாய்களை வளர்க்க உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இத்தகைய நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக வீட்டை விட்டு, வேறு பகுதிக்கு குடிபோவதுதான் வழக்கம். ஆனால், பவுலா மில்லர்(68), மகன் கேரி மில்லர்(50), அவரது சகோதரர் கேரி எட்வர்ட்ஸ்(55) அடங்கிய பவுலா குடும்பமோ, தமது நாய்களுடன், காரில் குடி புகுந்துள்ளது.

வயதான இரு நாய்கள் மற்றும் நான்கு குட்டி நாய்கள் உட்பட ஆறு நாய்கள் இருப்பதால், அவை குரைக்கும் சத்தத்தை பொறுக்க முடியாத அக்கம்பக்கத்தினர் அவர்களை வீட்டை விட்டு வெளியேற கோரி புகாரளித்தனர்.

இதனையடுத்து, பவுலா குடும்பம் வயதான நாய்களையாவது கூடவே வைத்துக்கொள்ள அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நாய்களை தங்களுடைய கார்களில் வைத்தே பராமரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

பவுலா குடும்பத்தினர் காற்றோட்டத்துக்காக காரின் ஜன்னல்களை இரவும், பகலும் திறந்தே வைத்துள்ளனர், காரிலேயே உணவூட்டுகின்றனர்.

அருகாமையில் இருக்கும் பூங்காவின் கழிவறையை நாய்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றன. பகலில் நண்பர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கே விளையாட வைக்கின்றனர்.

இரவுகளில் பவுலாவின் குடும்பத்தினர் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து நாயுடன் காரில் தங்கிக் கொள்கின்றனர்.

அந்நாட்டு சட்டப்படி இரண்டு படுக்கை கொண்ட வீட்டில் இரண்டு நாய்கள் வரை மட்டுமே வளர்க்கலாம். ஆகையால், இரண்டு நாய்களை அனுமதிக்க நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.

ஆனால், 4 குட்டி நாய்களை விட்டுப் பிரிய மனமில்லாத பவுலா குடும்பத்தினர், பகலையும், இரவையும் நாய்களுடனே கழிக்கின்றனர்.

இந்த நாய்களின் உடல்நிலையை கருத்திற்கொண்டு அவற்றை தொண்டு நிறுவனங்கள் எடுத்துச் செல்ல எண்ணினாலும், உரிமையாளர்களான பவுலா குடும்பத்தினரின் அனுமதியின்றி எதுவும் செய்ய முடியாத நிலையே நீடித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share.
Leave A Reply