மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடியில் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
பிள்ளையாரடியைச் சேர்ந்த சு.உதயவாணி (24 வயது) என்னும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.
மட்டக்களப்பு புலவி பிள்ளையார் கோவிலில் பூசகருடன் இப் பெண் வசித்து வந்துள்ளார். கல்குடா விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த குறித்த பூசகரான கிருஷ்ணபிள்ளை சுதாகரன் (35 வயது) என்பவரே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
ஏற்கனவே திருமணம் முடித்து 2 பிள்ளைகளுக்கு தந்தையாக இருக்கும் நிலையில் இவர் மேற்படி பெண்ணையும் இரண்டாம் தாரமாக முடித்த நிலையில் மேற்படி கோவில் விடுதியில் வசித்து வந்துள்ளனர்.
இவ்வாறு இருக்கும் போது இவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இப் பெண்ணை கொலை செய்த இவர் தூக்கில் தொங்க வைத்து விட்டு தனது மனைவி தற்கொலை செய்துவிட்டார் எனக் கூறி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.
இவரின் செயலில் சந்தேகம் கொண்ட பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் குறித்த பூசகரை கைது செய்துள்ளதுடன் இப் பெண் ணின் கொலை தொடர்பில் மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தலத்திற்கு சென்ற மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் சம்பவம் நடைபெற்ற இடத்தினை பார்வையிட்டுள்ளதுடன் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இவர் தொடர்பான மரண விசாரணைகளை ஒத்திவைப்பதாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதற்கிணங்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட குறித்த பெண்ணின் கணவனான பூசகரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி சம்பத் பெரேரா தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற னர்.