தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தரவேண்டும். அப்படித் தருவார்களானால் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம்.
எமது இலக்கு 20 ஆசனங்களாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ரொறன்ரோவில் தமிழ்த் ததேசியக் கூட்டமைப்பு (கனடா) ஒழுங்கு செய்த இரவு விருந்தில் தொலைபேசி வாயிலாக பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய சம்பந்தன்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது. எம்மைப் பொறுத்தவரை எமது அரசியல் பயணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. அதனை முடிக்க விரும்புகிறோம்.
எதிர்வரும் 17 இல் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 20 ஆசனங்களை த.தே.கூ. பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு 20 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் போது எங்களால் வலுவான நிலையில் இருந்து அரசாங்கத்தோடு பேசமுடியும்.
அதற்கு மக்கள் ஆதரவு எமக்கு வேண்டும். இந்தத் தேர்தல் மூலம் ஏற்படும் விளைவுகள் எதிர்காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்தத் தேர்தலை எமது அரசியல் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக கருதுகிறோம்.
இனப்பிரச்சினைக்கான தீர்வாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அரசியல் அமைப்பு முறையிலான அரசியல் தீர்வை 2016 ஆம் ஆண்டளவில் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.