சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்ற காலை புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை 10.03 மணியளவில், ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்றார்.
இந்த நிகழ்வில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
எனினும் இன்றைய நிகழ்வில் அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறவில்லை. தேசிய அரசாங்கமே அமைக்கப்படவுள்ளதால், அமைச்சர்கள் பதவியேற்பு தாமதமாகியுள்ளது.
அதேவேளை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்கவும், ஐதேக பொதுச்செயலர் கபீர் காசிமும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.