விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கும் தகவல்களை மறுதலிக்கும் வகையில் இதனை அவர் கூறியுள்ளார்.

இலங்கைப் படையினர் பிரபாகரனை கொல்லவில்லை எனவும், பிரபாகரனின் மனைவியும் மகளும் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கருணா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு சரத் பொன்சேகா அளித்துள்ள பேட்டியில் பிரபாகரன் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

பிரபாகரனின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது எனவும், துப்பாக்கியால் சுட்டிருந்தால் தலையில் எற்படக் கூடிய காயம் வித்தியாசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் தலையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது, துப்பாக்கியினால் தனக்கு தானே சுட்டுக் கொண்டிருந்தால் வேறு விதமாக காயம் ஏற்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் குண்டு அல்லது எறிகணையின் பகுதி பிரபாகரனின் தலையில் பட்டு இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் இறந்த பின்னர் அவரது உடல் பிரேதப் பிரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் சட்டங்களின் அடிப்படையில் பிரதேப் பரிசோதனை நடத்தி, மரபணு பரிசோதனையும் நடத்தியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மனைவி மகள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது பற்றி தம்மிடம் விபரங்கள் எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றியும் தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த களத்தில் காணப்பட்ட அனைத்து சடலங்களும் அடையாளம் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனின் மூத்த புதல்வர் சார்ள்ஸ் அன்ரனியின் சடலத்தை தேடியதாகவும் அதனைக் கண்டு பிடித்து அடையாளம் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தின் இறுதி நாட்களில் குமரன் பத்மநாதன், செய்மதி தொலைபேசி ஊடாக பிரபாகரனுடன் தொடர்புகளைப் பேணி வந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான போராட்டமொன்றின் போது ஒரு நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பதனை மிக உறுதிபடக் கூறுவது சாத்தியபடாது எனவும், யுதத்தில் பங்கேற்றவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இதனைச் செய்வது சிரமமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நந்திக்கடல் பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரனைச் சுற்றியிருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply