கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் பரிசல் விபத்தில் ஐந்து நாட்களுக்கு பிறகு கிடைத்திருக்கிற பத்து மாத குழந்தை சுபிக்ஷாவின் உடல் பார்ப்பவர் அனைவரையும் பதறச் செய்திருக்கிறது.
கடந்த 30ஆம் தேதி, திருமண நாள் கொண்டாடுவதற்காக சென்னை தியாகராய நகரிலிருந்து ஒகேனக்கல் வந்த ராஜேஷ் – கோமதி தம்பதி மற்றும் அவர்களுடைய குழந்தைகள் சச்சின், தர்ஷன், மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் கெளரி, மைத்துனர் ரஞ்சித் அவரது மனைவி கோகிலா, அவரது பத்து மாத குழந்தை சுபிக்ஷா ஆகியோர் பரிசலில் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பரிசல் கவிழ்ந்ததில், பரிசல் ஓட்டி காஜா முருகேசன் உட்பட பத்துபேரும் தண்ணீருக்குள் மூழ்கினர். இதில் ராஜேஷ், அவர் மனைவி கோமதி மற்றும் மகன் சச்சின், பரிசல் ஓட்டி காஜா முருகேசன் தவிர மற்ற ஆறு பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
காவல்துறையும், மீட்பு நிலையத்தைச் சேர்ந்தவர்களும் உடனடியாக தேடுதல் பணியை முடுக்கிவிட்டு 30ஆம் தேதி இரண்டு உடல்கள், 31ஆம் தேதி 3 உடல்கள் என ஐந்து உடல்களை மீட்டு விட்டனர். ஆனால், பத்து மாத குழந்தையான சுபிக்ஷாவின் உடலை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த ஐந்து நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட பரிசல்கள், தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று மாலை சுமார் 4.45 மணியளவில் விபத்து நடந்த இடத்திலிருந்து சற்றுத்தொலைவில் உள்ள கங்கல்குழி என்ற இடத்தில் சுபிக்ஷாவின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது.
மீன்கள் தின்ற கண்கள், உப்பிய உடல் என அந்த பிஞ்சுக்குழந்தையின் உடலை பார்ப்பர்கள் பதறித் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
திருமணத்தை தள்ளிப்போட்ட பிளஸ் 2 மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து!
03-09-2015
சிவகங்கை: நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தள்ளிப்போட்ட ஆத்திரத்தில் பிளஸ் 2 மாணவியான மணமகளை, சரமாரியாக கத்தியால் குத்திய மணமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருபவர் மாணவி நந்தினி.
இவருக்கும், மானாமதுரை அருகே உள்ள சோமாத்துார் கிராமத்தை சேரந்த சந்திரசேகர் என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யபட்டது.
ஆனால், தான் 12 ஆம் வகுப்பு படிப்பதால், இப்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்று நந்தினி தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து நந்தினிக்கும், சந்திரசேகருக்கும் நடக்க இருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது. திருமண கனவில் இருந்த மணமகன் சந்திரசேகருக்கு, திருமணம் நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் மணமகன் சந்திரசேகர், மணமகள் நந்தினி மீது ஆத்திரம் அடைந்தார். வழக்கம்போல் நேற்று மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக நந்தினி, தனது சைக்கிளை எடுக்க மானா மதுரை காந்தி சிலை அருகே வந்திருக்கிறார்.
அப்போது அங்கு வந்த சந்திரசேகர், திருமணம் செய்து கொண்டு படிக்கும்படி நந்தினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
ஆனால் நந்தினி அதற்கு சம்மதிக்காததால், ஆத்திரம் அடைந்த சந்திரசேகர், தான் கொண்டு வந்த கத்தியால் சரமாரியாக நந்தினியை குத்தி உள்ளார். இதில், நந்தினிக்கு 17 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.
உடனே சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்களும், சாலை பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினரும் ஓடி வந்து நந்தினியை மீட்டு, சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவசர சிகிச்சை முடிந்த நிலையில் நந்தினி, தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், நந்தினியை குத்திவிட்டு தப்பி ஓடிய சந்திரசேகரை பொதுமக்களும், போலீசாரும் விரட்டி சென்று பிடித்தனர். கைது செய்யப்பட்ட சந்திரசேகரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அ.சையது அபுதாஹிர்