பிரேசில் நாட்டின் சாவோ பவுலோ நகரில் சர்ச் ஒன்றின் வெளியே பல பேர் முன்னிலையில் பிணை கைதியாக பிடிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணை துப்பாக்கி ஏந்திய நபரிடம் இருந்து முதியவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தில் அந்த முதியவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, 61 வயது நிறைந்த முதியவர் பிரான்சிஸ்கோ எராஸ்மோ ரோட்ரிக்ஸ் டி லிமா என்பவர் தைரியமுடன் துப்பாக்கி வைத்திருந்த நபரை நோக்கி முன்னேறுகிறார்.
அவனை கீழே வேகமுடன் தள்ளி விடுகிறார்.
இந்த நிலையில், துப்பாக்கி மனிதனிடம் சிக்கியிருந்த இளம்பெண் வாய்ப்பை பயன்படுத்தி தப்பித்து ஓடுகிறார். ஆனால், துப்பாக்கி வைத்திருந்த லூயிஸ் ஆன்டானியோ டா சில்வா என்ற அந்த குற்றவாளி எழுந்து துப்பாக்கியை எடுத்து தனக்கு மிக அருகில் இருந்த முதியவரை சுட்டுள்ளார்.
இதில், முதியவர் எராஸ்மோ பலியானார். போலீசார், சில்வாவை துப்பாக்கி சூடு நடத்தி சாய்த்தனர். சில்வாவை தாக்கி இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட எராஸ்மோவை போலீசாரின் குண்டுகள் தவறுதலாக தாக்கியிருக்கும் வாய்ப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இளம்பெண்ணை பிடிப்பதற்கு முன்பு 49 வயது கொண்ட சில்வா, சர்ச்சில் 20 நிமிடங்கள் அனைவருடனும் சேர்ந்து இறை வணக்கம் நடத்தி கொண்டு இருந்துள்ளான் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இளம்பெண்ணை பிடித்த பின். சர்ச்சின் பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கொள்ளை, திருட்டு, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்காக 22 வருட சிறை தண்டனையை சமீபத்தில் சில்வா முடித்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.
காயமடைந்த பெண் குறித்த பெயர் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தை அந்த வழியே சென்ற நபரொருவர் பார்த்து அருகில் சென்று தலையிட்டு விசாரித்துள்ளார்.
இதில் குற்றவாளி சில்வா துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த அந்நபர் அந்த இடத்திலேயே பலியானார். காயமடைந்த பெண்ணை உள்ளூர் போலீசார் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ராணுவ போலீசார் தாக்கியதில் காயமடைந்த குற்றவாளி சில்வா அந்த இடத்திலேயே மரணமடைந்துள்ளான். இந்த சம்பவத்தில் ராணுவ போலீசார் காயமடையவில்லை.