ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்துகொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதியளிக்காவிட்டால் பதவி துறக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எச்சரித்துள்ளார்.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என அறிவித்துள்ளது. அத்துடன் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபை உறுப்பினர் களும் கலந்துகொள்ள முடியாதென மாகாண சபை அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் ஜெனீவாவுக்கு செல்ல தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அனந்தி சசிதரன் குறிப்பிட்டதாவது:
வடக்கு மாகாண சபை அவைத் தலைவரின் இந்த கருத்து மன வேதனை அளிக்கின்றது. நான் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் சமூக ஆர்வலராகவுமே ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்ள செல்கின்றேன்.
ஜெனீவா அமர்விற்கு செல்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதி நிலைப்பாட்டை கட்சியின் உயர்பீடம் அறிவிக்க வேண்டும்.
எனினும் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்வதற்கான அனுமதியை கட்சியின் தலைமைப்பீடம் மறுத்தால் பதவியை இராஜினாமா செய்வேன் என்றும் கூறினார்.
சிவாஜிலிங்கம், அனந்தி போன்றவர்கள் தனிப்பட்ட ரீதியிலேயே ஜெனிவா செல்லலாம். VIDEO
வடமாகாணசபை அங்கீகரிக்காமல் மாகாணசபையின் சார்பில் உறுப்பினர்கள் எவரும் ஜெனீவா அமர்வுகளில் மாகாணசபையின் சார்பில் பங்கெடுக்க முடியாது.
என தெரிவித்திருக்கும் வடமாக ணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தேவை இருப்பின் தனிப்பட்ட முறையில் பங்கெடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் மாகாணசபை சார்பில் உறுப்பினர்கள் குழு பங்கேற்குமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.