ilakkiyainfo

ஐயாவின் பதவி: வரமா? வலையா? -ப.தெய்வீகன் (கட்டுரை)

‘தந்தையாய்’, ‘தளபதியாய்’, ‘தலைவராய்’ பயணித்த தமிழர் அரசியல் தற்போது ‘ஐயாவாய்’ வந்து புதுவடிவம் பெற்றுநிற்கிறது என்றார் அண்மையில் என்னிடம் அரசியல் பேசிய முதியவர் ஒருவர்.

ஆம், நடந்து முடிந்த பொதுத்தேர்தல் பெறுபேறுகளுடன் அகன்ற மேற்குலக அதிகார மையத்தின் ‘உத்தியோகபூர்மற்ற மாநிலமாக’ மாறிவிட்ட இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவாகியிருக்கிறார்.

இலங்கை தொடர்பான அனைத்துலக நிகழ்ச்சி நிரல் என்பது முறையான முன்முடிவுகளுடன் சீராக நகர்ந்து வருவதற்கான அருமையான உதாரணம் என்றால் சம்பந்தன் அவர்களது நியமனத்தை கூறலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஊடான நாடாளுமன்ற பதவி ஒன்றை திருகோணமலையில் துரைரட்ணசிங்கத்துக்கு வழங்கவேண்டும் என்பதற்கு ‘நான் அதிகம் திருமலையில் தங்கியிருக்கும் வாய்ப்புக்கள் இருக்காது.

ஆகவே, இந்த மாவட்டத்தைப் பொறுப்பேற்பதற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு தேவை’ என்று சம்பந்தர் அப்போது கூறியதன் சூட்சுமங்கள் தற்போது விளங்கும் வகையில் உள்ளன.

இந்த நியமனத்தின் ஊடாக இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்வதற்கு எல்லோரும் ஆர்வத்துடன் காணப்பட்டாலும் இந்தியா, மஹிந்தவுக்கு பின்னரான மைத்திரி யுகத்தில் அணில் ஏறவிட்ட கதைபோலத்தான் தெரிகிறது.

இலங்கையின் சகல அரசியல் மாற்றங்களுக்கு பின்னணியிலும் தனது அரூப கரங்களினால் ‘அருளாட்சி’ செய்யும் இந்திய தரப்பு, சம்பந்தரின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்பு விடயத்தில் மூச்சு பேச்சைக் காணவில்லை.

வாழ்த்துக்களோ அல்லது குறைந்த பட்சம் கொழும்பிலுள்ள தூதரகத்திலிருந்து அறிக்கையைக்கூடக் காணவில்லை.

முன்பொருமுறை இந்தப் பத்தியில் குறிப்பிட்டதைப்போல, மைத்திரி யுகத்தில் இந்தியா எதிர்பார்த்த மாற்றங்கள் வேறு, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் வேறு.

தான் எதிர்பார்த்த மாற்றங்களை மேற்குலகுடன் சேர்ந்து அமுலாக்குவதற்கு மஹிந்தவைத் துரத்தி, கையுடன் பேருவுகையுடன் களமிறங்கிய இந்தியாவுக்கு தற்போது ஏற்பட்டிருப்பது, இலங்கை அரசினால் ஏற்பட்ட ஏமாற்றம் மட்டுமல்லாமல் மேற்குலகினாலும் ஏற்பட்டிருக்கும் இரட்டிப்பு ஏமாற்றம் ஆகும்.

வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்த காலப்பகுதியில் இலங்கை அரசு இந்தியாவை ‘வெட்டி ஓடிய’ அதேபோன்ற அரசியல் காலப்பகுதியே தற்போது மீண்டும் ஏற்பட்டிருப்பதை காணலாம்.

விடுதலைப் புலிகளுக்கு பதிலாக தமிழர் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேற்குலம் தன்சார்பாக மாற்றியிருக்கிறது. அவ்வளவுதான் இதில் வித்தியாசம் ஆகும்.

ஆனால், முற்றுமுழுதாகவே இந்த விடயத்தை கைநழுவ விட்டுவிடாமல் பிரதமர் ரணில் மற்றும் சந்திரிகா அம்மையார் ஆகியோரை அழைத்து பேச்சு நடத்துவதற்கு இந்தியா எடுத்திருக்கும் முடிவானது இலங்கையில் நடைபெற்றுவரும் மாற்றங்கள் தொடர்பான அதன் தொடர்ச்சியான கரிசனையை எடுத்தியம்புகிறது.

சரி.

தமிழர் தரப்புக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் இடையில் கொள்கை போராட்டம் ஏதாவது உள்ளதா? சம்பந்தர் ஐயா இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதில் தமிழர் தரப்புக்கு ஏதாவது தோல்வி ஏற்பட்டிருக்கிறதா என்பதை ஆராய்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நம்பகத்தன்மைக்கு மிக முக்கியமான விடயமாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி எனப்படுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாராலும் வழங்கப்படவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிக ஆசனங்களை பெற்ற மூன்றாவது கட்சி என்ற அடிப்படையில், முதலிரண்டு கட்சிகளும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து தேசிய அரசாங்கமாக சங்கமித்துவிட மூன்றாவது கட்சியான தமிழத் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகிவிடுகிறது. இதில் ஏற்பதற்கும் நிராகரிப்பதற்கும் எதுவும் இல்லை.

இந்த விடயத்தை சரியாக புரிந்துகொள்ளாத சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சம்பந்தர் ஐயாவும் எதிர்க்கட்சி தலைமையாகி சிங்கள தேசத்தின் கால்களில் விழுந்துவிட்டதாகவும்

தமிழர்களின் தலைவிதி இனிமேல் நம்பி வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரணாகதி பாதையில்தான் நகரப்போகிறது என்பது போலவும் விமர்சனம் செய்கின்றனர்.

இலங்கையின் நாடாளுமன்ற முறைமைக்குள் போட்டியிடுவதற்கு தலைப்பட்ட பின்னர், அங்கு செல்லும் கட்சிகள் தத்தமது பலத்தின் ஊடாக தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன்களை முன்னிறுத்தி எதிர்த்தரப்புடன் போராடி எவ்வாறு உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதை பார்க்கவேண்டுமே தவிர, அவ்வாறானதோர் அரசியல் கலாசாரத்தில் நம்பிக்கையற்றவர்கள் மாற்று வழிகளைத்தான் தெரிவாக கொள்ளவேண்டும்.

அப்படியானால், சம்பந்தரின் தற்போதைய பதவி தமிழ்மக்களுக்குரிய தீர்வுக்கான கருவியாக அமையப்போகிறதா?

amirthalingam
1977ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் பதவியை அப்போதைய ஆட்சித்தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன எவ்வாறு சாதுரியமாக பயன்படுத்தி – இராஜதந்திர ரீதியில் – அந்த பதவியேற்புக்கு பின்னர் ஆறு வருடங்களில் தமிழ்த் தேசிய அரசியல் தலைமையை போராளிக் குழுக்களுக்கும் எதிரியாக்கி தமிழ் மக்களுக்கும் எதிரியாக்கி சிங்கள மக்களுக்கும் எதிரியாக்கி குழி தோண்டி புதைத்தது என்பது கசப்பான வரலாறு.

தற்போது, முதலமைச்சர் கூறியது போல, மாமனது அரசியல் சூத்திரத்துடன்தான் மருமகனும் – ரணிலும் – தமிழர் விவகாரத்தின் மீது சவாரி விடப்போகிறாரா என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது இராஜதந்திர தராசில் எடைபோட வேண்டிய முக்கியமான விடயம்.

அதேபோல, ஐக்கிய இலங்கைக்கு வெளியே எக்காரணம் கொண்டும் ஒரு தீர்வு குறித்து சிந்திப்பதற்குக்கூட அனுமதிக்காமல் தொடர்ந்தும் தமிழர் தரப்பை ஓர் அரசியல் பொறியினுள் வைத்திருப்பதற்கான நீண்ட காலத்திட்டமாகவும் இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது சம்பந்தரை சுற்றி அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

இன்னொருவகையில் கூறப்போனால், இனநல்லிணக்கம், சமத்துவம், சந்தோசம் எல்லாம் ஏற்படுத்தப்படவேண்டும் என்று சிங்கள தரப்புக்கு நித்தமும் சர்வதேசம் ஓதும் விடயங்களை தமிழர் தரப்பின் ஊடாகவே இலங்கையில் ஏற்படுத்துவதற்கும் சிங்கள மக்களை நோக்கி தமிழ் மக்கள் இருகரம் நீட்டி நட்புபாராட்டி அழைப்புவிடுவதற்கான ‘முஸ்தபா முஸ்தாபா’ பொறிமுறைதான் இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவி என்றுகூறினால்கூட தவறில்லை.

இந்த பின்னணியில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழர் தரப்புக்கு மனமுவந்து தந்திருப்பது நிச்சயம் வரமாக இருக்க நியாயமில்லை. வலைதான். போராடிக்கொண்டே முன்னகரவேண்டிய பொறி என்றும் கூறலாம்.

ஆனால், சம்பந்தர் ஐயா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கணக்கென்பது வேறு. அதாவது, மூன்றாவது பலம்பொருந்திய தனிப்பெரும் சக்தியாக நாடாளுமன்றத்தில் கோலோச்சவுள்ள தமிழ்க் கூட்டமைப்பு அமைச்சுக்களை பெற்றுக்கொள்ளாமலும் அரசாங்கத்தில் நேரடியாக அங்கம் வகிக்காமலும் அதன் நடவடிக்கைகளில் கணிசமான செல்வாக்கை செலுத்துவதற்கான வாய்ப்பையும் அந்தஸ்தையும் ஒருங்கே தரவல்ல இடம் எதிர்க்கட்சி தலைவர் பதவியே ஆகும்.

தமிழர் பிரச்சினை தொடர்பான அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வதாயின் வடக்கு- கிழக்கு இணைப்பெனப்படுவது அத்தியாவசியமானது. அதையும் தாண்டி, கூட்டமைப்பு கூறும் சமஸ்டி மற்றும் சுயநிர்ணய ‘சுயிங்கம்’ எல்லாவற்றையும் அடுத்த தேர்தல் மட்டும் சப்பிக்கொண்டிராமல் அதற்கு அண்மித்து போவதாக இருந்தால்கூட அரசியலமைப்பு மாற்றம் எனப்படுவது அவசியமாகும்.

இந்த ‘காரியங்களை‘ சாதிப்பதற்கு நாடாளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் சிங்கள தரப்பின் ஆதரவு அவசியம்.

சம்பந்தர் ஐயா நாடாளுமன்றத்தினுள் போராட சுமந்திரன் அவர்கள் வெளியே போராடி சிங்கள மக்களின் மனங்களை வென்றுமுடித்தால்தான் ஒருவாறு மாவையும் சிறிதரனும் தேர்தலில் கூறிய விடயங்கள் சரிவந்து அது சரவணபவன் அவர்களது பத்திரிகையில் வெளியாகி மக்களை சென்றடையும்.

இதைவிட, தற்போதைக்கு தமிழர் தரப்பை வேண்டியவர்கள் மட்டும், அமெரிக்கா – இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் குறிப்பிட்ட சிலர் – சந்தித்துச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இனிவரும் காலங்களில் ஓர் எதிர்க்கட்சியாக, சிறிலங்காவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு தரப்பினரும் சந்தித்தேயாகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சீனா உட்பட அனைத்து இராஜதந்திரிகளுடனுமான தமிழ் கூட்டமைப்பின் இராஜதந்திர வலயம் விசாலமாகப்போகிறது. கூட்டமைப்பின் சுமந்திரன் கூறும் ‘மென்வலு’ இந்தமாதிரியான சந்திப்புக்கள் மற்றும் சம்பாசணைகளில் சரமாரியாக பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகப்போகின்றன.

இவை எல்லாவற்றையும்விட, வெளியில் தெரியாத இன்னொருவிடயம் தமிழரசுக்கட்சி சார்ந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்ததும் ஆகும்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி ஊடாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கத்தி மேல் நடப்பதற்கு ஆயுத்தமாகியுள்ள கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்ளவொள்ள அரசியல் முதலீடு எனப்படுவது, வடக்கு கிழக்கில் கட்சியின் எதிர்கால இருப்புக்கு அசைக்கமுடியாத அத்திபாராமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களின் பலமான ஒரே ஒரு சக்தி என்ற கனதியான செய்தியை மக்கள் மத்தியில் ஆழமாக பயிரிடுவதற்கு இந்த பதவி பெருமளவில் பயன்படப்போவது உறுதி.

எது எப்படியிருப்பினும், இந்த பதவியின் கட்சி சார்ந்த தன்னலம் சார்ந்த பக்கவிளைவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த பதவியை தனது கொள்கையிலும் லட்சியத்திலும் சறுகாமல் உறுதியாக நின்று உபயோகிக்க தலைப்படுமாயின், இந்த பதவியால் ஏற்படக்கூடிய பாதகங்களைவிட சாதகங்களே அதிகம்.

-ப.தெய்வீகன்-

Exit mobile version