“சுப்பர் சரக்கு, சுப்பர் ஐட்டம்” எனக் கூறியதால்.. “தம்பதிகள், இளைஞர்களிடையே மோதல்”: தம்பதிகள் படுகாய்ம்!!
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் வீதியைச்சேர்ந்த புதுமணத்தம்பதியர் இருவர் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். இந்து ஆரம்பப்பாடசாலை ஆசிரியையான தர்சினி (வயது 41) தனியார் கல்லூரி ஒன்றின் ஆசிரியரான மாதவ மணிவண்ணன் (வயது 44) ஆகிய இருவருமே இவ்வாறு இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இவர்கள் இருவரும் தேநீர் அருந்துவதற்காக யாழ். பஸ் நிலைய கடையொன்றிற்குச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த இனந்தெரியாத மூன்றுபேர் மணப்பெண்ணை பார்த்து “சுப்பர் சரக்கு, சுப்பர் ஐட்டம்” என கூறி தகாத வார்த்தைகளால் கேலி செய்துள்ளனர்.
அவர்களின் தகாத வார்த்தைப் பிரயோகங்களை சகித்துக் கொள்ள முடியாமல் மாதவ மணிவண்ணனும் அவர்களை எதிர்த்துப் பேசியுள்ளார்.
பின்னர் நிலைமை மோசமடைவதை உணர்ந்த தர்சினி பொலிஸ் அவசர அழைப்பான 119க்கு அழைப்பை ஏற்படுத்தி விடயத்தைக் கூறியுள்ளார்.
என்றாலும் ஒரு மணித்தியாலமாகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தராமையால் தர்சினி தனது சகோதரனுக்கு விடயத்தைச் சொல்லி சம்பவ இடத்திற்கு வரும்படி கோரியுள்ளார்.
உடன் சம்பவ இடத்திற்கு வந்த சகோதரன் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன் போது திடீரென பின்தொடர்ந்து வந்த சந்தேக நபர்கள் அவர்களை தாறுமாறாகத் தாக்கியுள்ளனர்.
அத்துடன் தாக்குதல் நடத்துபவர்களை மறைப்பதாகக் கூறி மேலும் சிலர் சந்தேக நபர்களுடன் இணைந்து தாக்கிவிட்டு ஓடியுள்ளனர்.
தாக்கப்பட்டவர்களை அருகில் இருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்குச் செல்லும் போது பொலிஸார் அந்த இடத்திற்கு வந்தனர். காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.
மாதவ மணிவண்ணன் தலையில் கடுமையாகத் தாக்கப்பட்டு ஒரு கை முறிவடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவரது மனைவியான தர்சினி காயங்களுடன் தொடர்ந்து யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்கள் இருவரும் திருமணம் முடித்து ஒரு வாரம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.