கிளிநொச்சி விசுவமடு கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்
செழியன் 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக எதிரிகள் நால்வருக்கும், தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐந்து பிள்ளைகளின் தாயாராகிய பெண்ணை அதே சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக நான்கு எதிரிகளுக்கும் இந்தத் தீர்ப்பில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நட்டஈடாக 5 இலட்ச ரூபாவும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு லட்ச ரூபாவும் வழங்க வேண்டும் என்றும் நட்டஈட்டை செலுத்தத் தவறும்பட்சத்தில் எதிரிகள் ஒவ்வொருவரும் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விதிக்கப்பட்டுள்ள தண்டப்பணத்தை செலுத்த தவறின் மேலும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பண்டித கெதர சாந்த சுபசிங்க, பத்திரண பண்டாரநாயக்க பிரியந்த குமார, தெல்கொல்லாகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்பேவல கெதர தனுஸ்க பிரியலால் ரத்நாயக்க ஆகிய 4 இராணுவ சிப்பாய்களுக்கு இந்த வழக்கில் 5 கூட்டுப்பாலியல் வல்லுறவு, பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, நான்காவது எதிரி மன்றில் ஆஜராகவில்லை. அவர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று நேற்று புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 5 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பாலியல் துஷபிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
நள்ளிரவு வேளையில் பாதுகாப்பற்ற தற்காலிகக் கூடார வீடொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் விசுவமடு பிரதேசம் மட்டுமல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமே பெரும் அச்சத்தில் மூழ்கியிருந்தது.
இந்தச் சம்பவத்தில் விசுவமடுவைச் சேர்ந்த 27 வயதுடைய 2 குழந்தைகளின் தாயார் ஒருவரை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும், மற்றுமொரு பெண்ணாகிய 5 குழந்தைகளின் தாயாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் 4 இராணுவத்தினருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
விசுவமடு பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றியிருந்த, பண்டித கெதர சாந்த சுபசிங்க, பத்திரண பண்டாரநாயக்க பிரியந்த குமார, தெல்கொல்லாகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்பேவல கெதர தனுஸ்க பிரியலால் ரத்நாயக்க ஆகிய 4 இராணுவ சிப்பாய்களுக்கு இந்த வழக்கில் 5 கூட்டுப்பாலியல் வல்லுறவு, பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்த வழக்கு விசாரணையின்போது, நான்காவது எதிரி மன்றில் ஆஜராகவில்லை. அவர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று நேற்று புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் முடிவில் 81 பக்கங்களைக் கொண்ட தனது தீர்ப்பை நீதிபதி இளஞ்செழியன் ஒரு மணித்தியாலம் பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்தார்.
குற்றம் சுமத்தப்பட்டிருந்த 4 இராணுவ சிப்பாய்களும் விசாரணையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குவதாக தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
அதேநேரம், கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 25 ஆயிரம் தண்டப்பணமும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் எதிரிகள் 2 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வழக்கின் எதிரிகள் நால்வருக்கும் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 20 வருடங்களும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு 5 வருடங்களும், நட்டஈடு வழங்காவிட்டால் 3 வருடங்களும், தண்டப்பணம் செலுத்தாவிட்டால் 2 வருடங்களுமாக மொத்தமாக 30 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் நீண்ட தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் முக்கியமாக தெரிவித்துள்ளதாவது:
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எதிரிகளான 4 இராணுவச் சிப்பாய்களும் இரண்டு தாய்மாரை, கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய குற்றத்தைப் புரிந்துள்ளனர் என்பது விசரரணை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் தன்மீது குற்றம் புரியப்பட்டபோது, இறுதி நேரம் வரையில் அவர்களைத் தடுத்துப் போராடியிருக்கின்றார் என்பதும் விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மற்ற பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை ஒப்புறுதி சாட்சியங்களின் மூலம் நிரூபணமாகியிருக்கின்றது.
கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தை மன்று விசேட கவனத்திற்கு எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தனது சாட்சியத்தில்
‘சம்பவம் நடைபெற்ற அன்று இரவு 12 மணிக்கு வீட்டினுள்ளே புகுந்த இராணுவத்தினர் கொட்டானால் முழங்காலில் அடித்தார்கள். அவர்கள் கையில் கிறிஸ் கத்தி வைத்திருந்தார்கள். அப்போது அருகில் படுத்திருந்த பிள்கைள் எழுந்து கத்தினார்கள்.
பயம் காரணமாகக் கத்திய அந்தப் பிள்ளைகளையும் அவர்கள் அடித்தார்கள். அவ்வாறு அவர்கள் கத்திக்கொண்டு எனது பக்கத்தில் வந்தபோது, இராணுவத்தினர் எனது உடலைச் சுரண்டி, என்னைப் பிடித்து இழுத்தார்கள்.
அப்போது எங்களுடன் இருந்த எனது தம்பி ரஞ்சித், அக்கா பாவம் அவரை அப்படி ஒன்றும் செய்ய வேண்டாம் என கத்தினான்.
அப்போது, அந்த இராணுவத்தினர் அவனுடைய கழுத்தைச் சவட்டி, அதனை முறித்தமாதிரியாக, அவனை இழுத்துச் செனறு அவனுடைய கைகளைக் கட்டுவதற்காக கொடிக்கயிற்றைப் பிடித்து அறுத்தார்கள்.
அவ்வாறு அவனுடைய கைகளைக் கட்டுவதற்கு முற்பட்டபோது, எங்கள் எல்லோரையும் அவர்கள் கொலை செய்யப் போகின்றார்கள் என்று பயந்தேன். அந்தப் பயத்தில் என்னைப் பிடித்துக்கொண்டிருந்த ஆமியைத் தள்ளிவிட்டு வெளியில் ஓடினேன்.
அவ்வாறு ஓடியபோது, எனது பின் மண்டையில் அடி விழுந்தது. அதேநேரம் 3 இராணுவத்தினர் என்னைப் பிடித்து வீட்டின் பின்னால் உள்ள பற்றைக்குள் கொண்டு சென்றார்கள்.
அவவாறு கொண்டு சென்றபோது என்னால் முடிந்த மட்டும் அவர்களிடமிருந்து தப்புவதற்கு முயற்சித்தேன் முடியவில்லை.
அங்கு வைத்து அவர்கள் என்னைக் கற்பழித்தார்கள். அவர்களே இந்த நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள்’ என அந்தப் பெண் தனது சாட்சியத்தில் தெரிவித்து, எதிரிகளை அடையாளம் காட்டினார்.
அதேபோன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் சாட்சியமளிகையில், ‘என்னை ஒருபக்கமாகவும், மற்றவரை மறுபக்கத்திலும் இராணுவத்தினர் இழுத்துச் சென்றார்கள்.
நான் 5 குழந்தைகளின் தாய் என்னை ஒன்றும் செய்ய வேண்டாம் என அவர்களிடம் அழுதபடி கெஞ்சினேன். அவர்கள் எனது உடைகளை பகுதியாகக் களைந்தார்கள்.
எனக்கு மாதவிலக்கு என்னை ஒன்றும் செய்ய வேண்டாம் என அப்போது அவர்களிடம் நான் சொன்னேன். அவர்கள் எனது உள்ளாடைகளைக் கழற்றி பார்த்தார்கள். பார்த்த பின்னர், எனது கைகளைக் கட்டி கீழே தள்ளிவிட்டார்கள்.
அப்போது சுமார் 20 மீற்றர் தூரத்தில் என்னை விடுங்கோ என்னை விடுங்கோ என மற்ற பெண் கத்திக்கொண்டிருந்தார். அவர் அவ்வாறு கத்த, கத்த வீட்டின் பின்னால் இருந்த மற்ற காணிக்குள் அவரை அவர்கள் இழுத்துச் சென்றார்கள்’ என தெரிவித்துள்ளார்.
மக்களையும் நாட்டையும் பாதுகாக்கச் சென்ற காவலர்களே குற்றம் புரிந்துள்ளார்கள்.
இந்த வழக்கில் எதிரிகளாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் இராணுவச் சிப்பாய்களாவர். இவர்கள் இந்தச் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில், கிளிநொச்சி விசுவமடு பிரதேசத்தில் நாட்டின் பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, இராணுவ உத்தியோகத்தர்களாக கடமைக்காக அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டிருந்தார்கள்.
அவ்வாறாக தேசிய பாதுகாப்பு கடமைக்காக அனுப்பப்பட்டிருந்தபோதே, இவர்கள் தங்களுடைய இராணுவ முகாமில் இருந்து வெளியேறிச் சென்று, கூட்டுப்பாலியல் மற்றும் பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்செயலைப் புரிந்திருக்கின்றார்கள்.
இந்தக் குற்றச் செயல் சம்பவம் நடைபெற்றதையடுத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த இராணுவ பொலிசார் இவர்கள் நான்கு பேரையும் அன்று அதிகாலையிலேயே கைது செய்திருந்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் கோர யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைத்தையும் இழந்து இராமநாதன் இடம்பெயர் அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்துவிட்டு, அரசாங்கமும், இராணுவத்தினரும் வழங்கிய மீள்குடியேற்றத்திற்கான வாக்குறுதியை அடுத்து, இந்தப் பெண்கள் தமது செர்நத ஊரான விசுவமடுவுக்குத் திரும்பிச் சென்று தற்காலிகக் கொட்டில் அமைத்து, அதில் தங்கியிருந்து தங்களுடைய காணிகளைத் துப்பரவு செய்வதில் ஈடுபட்டிருந்த வேளையில் இரவு 12 மணிக்கு அவர்கள் தங்கியிருந்த வீட்டினுள்ளே புகுந்து, இந்தக் குற்றச் செயலைப் புரிந்திருக்கின்றார்கள்.
இந்தச் செயலின் மூலம், யுத்தம் நடைபெற்றபோது, காப்பாற்றப்பட்டிருந்த அந்தப் பெண்களின் கற்பையும் மானத்தையும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இந்த 4 இராணுவ சிப்பாய்களும் சூறையாடியிருக்கின்றார்கள். கோர யுத்தத்தில் பாதுகாக்கப்பட்ட மானம் 2010 ஜுன் 6 ஆம் திகதி யுத்தம் இல்லாத சூழ் நிலையில் எதிரிகளான இராணுவ சிப்பாய்களினால் பறிக்கப்பட்டிருப்பது பாரிய குற்றச் செயலாகும்.
பொது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தமது அரச கடமையாகிய பாதுகாப்பை வழங்காமல் இரண்டு தாய்மார்கள் மீது கூட்டுப் பாலியல் வல்லறவு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் செய்தது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அது மட்டுமல்லாமல், இந்த நாட்டு இரராணுவத்தினரின் நற்பெயரைக் கெடுத்த செயலாகும். எனவே, இலங்கை இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இராணுவத்தின் பாலியல் வல்லுறவு குற்றம் என்பது சர்வதேச குற்றம், அத்துடன் அது ஒரு போர்க் குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றம் என ஐநா யுத்த குற்ற நீதிமன்ற சட்டங்களிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சடடங்களிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட போது யாழ் மேல் நீதிமன்றம் பொதுமக்களினால் நிறைந்து வழிந்தது. தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, எதிரிகள் நான்கு பேரும் உடனடியாக, பாதுகாப்பாக சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றக் கட்டிடத்தின் முதலாம் மாடியில் அதிரடிப்படை பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். நீதிபதி இளஞ்செழியனுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.