பிரபஞ்சத்தின் மாபெரும் மர்மமாக கருதப்படும் கருந்துவாரத்தை விடவும் பெண்களே மிகவும் பெரிய மர்மமாகவுள்ளதாக உலகப் பிரபல பிரித்தானிய பௌதிகவியலாளரான ஸ்டீவன் ஹவ்கிங், தெரிவித்துள்ளார்.
பௌதிகவியலில் கலாநிதி பட்டம் பெற்று மர்மமாகவுள்ள பல பௌதிகவியல் செயற்கிரமங்களுக்கு தன்னால் விடை அளிக்க முடிந்த போதும், பெண்களின் மனதில் என்ன உள்ளது என்பதைக் கண்டறிவது தொடர்ந்தும் தனக்குப் பாரிய மர்மமாகவே உள்ளதாக அவர் கூறினார்.
எதிர்பாலினர் (பெண்கள்) மிகப் பெரிய மர்மமாக, புதிராக தனக்கு தோன்றுவதாக தெரிவித்த அவர், அந்த மர்மம் தீர்வு காணப்படாத புதிராகவே தொடர்ந்து இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பிரயோக கணித மற்றும் பௌதிகவியல் பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் ஹவ்கிங் இரு தடவைகள் திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவராவார்.
அவர் 2012 ஆம் ஆண்டில் தனது 70 ஆவது பிறந்த தினத்தின் போது, தான் பெண்களைப் பற்றி சிந்திப்பதற்கே அதிக நேரத்தைச் செலவிடுவதாக ஒப்புக் கொண்டிருந்தார்.
செவிப்புலன் ஆற்றல் குறைந்த தந்தையுடன் உரத்த குரலில் வீதியில் உரையாடிய நபர்
வீதியில் செவிப்புலன் ஆற்றலற்ற தனது தந்தையுடன் மிகவும் உரத்த குரலில் உரையாடிய நபரொருவரால் சினமடைந்த அவரது அயல் வீட்டில் வசிக்கும் இளைஞன், அவரது குரல்வளையை உடைந்த போத்தலால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சிட்னி நகரின் தென்மேற்கே ரகெம்பா எனும் இடத்தைச் சேர்ந்த கெல்லி வென்ரிகடூ (45 வயது) என்ற மேற்படி நபர், சம்பவ தினம் அதிகாலை வேளையில் தனது பெற்றோருடன் வெளியில் சென்று விட்டு திரும்பிய வேளையிலேயே இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளது.
தாய் வீட்டினுள் சென்றுவிட கெல்லி வீதியில் நின்றவாறு தனது செவிப்புலன் ஆற்றல் குறைந்த தந்தையுடன் உரத்த குரலில் உரையாடியுள்ளார்.
இதன்போது அங்கு வந்த அயல் வீட்டில் வசிக்கும் 24 வயது இளைஞன் சினத்துடன் கெல்லியை நெருங்கியுள்ளான்.
கெல்லி சத்தமாக உரையாடியது தனது தவறென ஒப்புக்கொண்டு அமைதியாக வீட்டுக்குள் செல்ல இணங்கிய போதும், அந்த இளைஞன் சினம் தணியாமல் கெல்லியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது குரல்வளையை உடைந்த போத்தலால் குத்தி அவரைப் படுகொலை செய்ததாக கெல்லியின் மகனான கிம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி படுகொலையை மேற்கொண்ட குறிப்பிட்ட இளைஞன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தானாக முன்வந்து பொலிஸாரிடம் சரணடைந்துள்ளான்.
அந்த இளைஞன் மதுபோதை காரணமாகவா அல்லது இனவாத குரோதம் காரணமாகவா மேற்படி படுகொலையை மேற்கொண்டான் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.