இந்தியக் கடற்படையின் பாரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’, நாளை மறுநாள் கொழும்புத் துறைமுகத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மூன்று பத்தாண்டுகளின் பின்னர் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ள முதல் விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ‘விக்கிரமாதித்யா’வுக்கு பெரியளவில் வரவேற்பை அளிக்க சிறிலங்கா கடற்படை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

கடைசியாக அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று 1985ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தது.

அதற்குப் பின்னர், கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ள, முதல் விமானந்தாங்கிக் கப்பலான ‘விக்கிரமாதித்யா’, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

44,500 தொன் எடையுள்ள இந்தப் போர்க்கப்பலில், 30 மிக்-29 போர் விமானங்களும், ஆறு காமோவ் உலங்கு வானூர்திகளும் தரித்து நிற்கும் வசதிகள் உள்ளன. 110 அதிகாரிகளும், 1500 மாலுமிகளும் இதில் பணியாற்றுகின்றனர்.

கொழும்புத் துறைமுகத்தில் தற்போது தரித்து நிற்கும், சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் வரும் வியாழக்கிழமை புறப்பட்டுச் செல்லவுள்ள நிலையிலேயே, இந்தியாவின் மிகப்பெரிய போர்கப்பலான ‘விக்கிரமாதித்யா’ கொழும்பு வரவுள்ளது.

இது இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு உறவுகளில் முக்கிய திருப்பம் என்று கூறப்படுகிறது.

INS-Vikramaditya

Share.
Leave A Reply

Exit mobile version